(Source: ECI/ABP News/ABP Majha)
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறதா? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
Tamil Nadu Cabinet Meet: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதால், அவரது வெளிநாட்டு பயணத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம்: மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை வேகப்படுத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்கக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாகவே, உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "வரும் 19ஆம் தேதிக்கு மேல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம்" என சொல்லியிருந்தார்.
உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுகிறதா? அதேபோல, கடந்த 6 மாத காலமாகவே, தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
கடைசியாக, கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதற்குபிறகு, மக்களவை தேர்தலும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டமும் நடைபெற்றதால் கடந்த 7 மாதங்களாக அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரையில், வரும் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படும் ஸ்டாலின், செப்டம்பர் 14ஆம் தேதிதான், தமிழகம் திரும்புகிறார்.