TN Budget 2024: இரட்டைக் காப்பியங்கள் மொழிபெயர்ப்பு... பழங்குடிகளின் மொழி வள மேம்பாடு... தலா ரூ.2 கோடி ஒதுக்கீடு
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே அதிக நிதியை ஒதுக்குவது தமிழகம்தான் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசி வருவதாவது:
’’
தமிழர்களின் ஒற்றுமை, அரசியல் நேர்மை, குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு மற்றும் பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில், அவற்றை மொழிபெயர்க்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நமது செழுமையான தமிழ் இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லவும், சிறந்த பன்னாட்டு அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்றுத் தமிழில் பல புதிய படைப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு, சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தியது. இதில் 40௦ நாடுகளில் இருந்து கக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் இலக்கிய முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழ்ப் படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க 483 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட, மொத்தம் 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைடுயழுத்தாகி உள்ளன.
கடந்த ஒரு நூற்றாண்டுகளில் பல்வேறு உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களை விட இரண்டு மடங்கு தமிழ்நூல்களை, தற்போது இரண்டே ஆண்டுகளில் மொழிபெயர்த்திட இவ்வரசு முன்முயற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச்சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய இவ்வாண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இம்முயற்சிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு செய்யப்படும்.
பழங்குடி மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களை பாதுகாக்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கீழடியில் திறந்த வெளி அரங்கம் அமைக்க ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.’’
இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.