’மன்னிப்பும் இல்ல, நஷ்ட ஈடும் இல்லை.. சொத்து விவரம் உண்மைதான்..’ உதயநிதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்ட சொத்து பட்டியல் மற்றும் புள்ளி விவரங்கள் அனைத்துமே உண்மையானவை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை மீது பல்வேறு நோட்டீஸ்களும் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸில், “அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளார். சுமார் ரூ. 2,039 கோடி சொத்து அமைச்சர் உதயநிதிக்கு இருப்பதாக தெரிவித்தார். இதனால், தன் மீது அவதூறு பரப்பியதாக அண்ணாமலை, தனக்கு ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக வழக்கறிஞர் வில்சன் வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதில், “திமுக பைல்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்ட சொத்து பட்டியல் மற்றும் புள்ளி விவரங்கள் அனைத்துமே உண்மையானவை. இந்த நோட்டீஸ் மூலம் மக்கள் தெரிந்து கொள்வதை வேறுவிதமாகத் தடுக்கும் தீவிர முயற்சியே தவிர இதில் வேறு ஒன்றுமில்லை.
பொதுமக்களுக்கு உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் உண்மையான தன்மையை கருத்தில்கொண்டு அனைத்து தகவலுமே பொறுப்புடன் வெளியிடப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வெற்றிகரமான நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அவர் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனத்தை அமைத்தார் என்பதை மறுக்கிறார். அமைச்சர் உதயநிதி அரசியல் பின்னணி மற்றும் குடும்பத் தொடர்பின் காரணமாக திரைப்படத் துறையில் வெற்றிபெற்றுள்ளார்.
குடும்ப அரசியல் அதிகாரத்தை தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். ஊழலின் மூலம் உருவாகும் பணத்தைச் சுத்தப்படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் எப்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படத் துறையில் எந்தவிதமான கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் செய்யவில்லை என்ற எங்களது கருத்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுக்கிறார். தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்திருப்பது, அவர் இப்போது தனது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அழுக்குகளிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள விரும்புகிறார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பின்னால் இயங்கும் சக்தியாக இருந்தவர் உதயநிதி.
பொதுமக்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் எந்த நற்பெயரையும் பெறவில்லை, ஆனால் எந்த தகுதியும் இல்லாமல் அவரது குடும்பத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரத்தை மட்டுமே அனுபவிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உங்கள் பிள்ளைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை நீங்கள் வெளிப்படுத்தியிருப்பதால்தான் உங்களின் குழந்தைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட விவரங்கள் பகிரப்படாதபோது எங்களில் ழுக்கம் மற்றும் நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரத்தை காட்டுகிறது. இது தனியுரிமை மீறல் என்ற கேள்விக்கு இடமில்லை.
ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் உங்களது குடும்ப தொடர்பு மற்றும் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த நோட்டீஸ் மூலம் குரலைக் கசக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை. நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. இதன்மூலம், மன்னிப்பு கேட்பது அல்லது நஷ்ட ஈடு கொடுப்பது என்ற கேள்விக்கு இடமில்லை. யாரேனும் ஏதாவது பணம் செலுத்த வேண்டியிருந்தால், அமைச்சர் உதயநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தான் சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் தமிழக மக்களுக்கு திருப்பித் தர வேண்டும்.
சபரீசன் [முதல்வரின் மருமகன் வி.சபரீசன்) ஒரு வருடத்தில் தாத்தாவை விட அதிக பணம் சம்பாதித்துள்ளார்கள்... ஒரு வருடத்தில் ரூ.30,000 கோடி சம்பாதித்துவிட்டார்கள், அதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. .திமுக கட்சி மற்றும் அதை நடத்தும் குடும்பம் தொடர்பாக எனது கட்சிக்காரர் கூறியுள்ள கருத்துகளில் முழு உண்மை உள்ளது என்பதை இது தெளிவாக காட்டுகிறது.” என தெரிவித்திருக்கிறார்