மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?
வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய மத்திய அரசு, போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது.
தென் மாவட்டங்களை திருப்பிப்போட்ட மழை வெள்ளம்:
குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. 24 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிந்து மறுகால் பாய்ந்தது.
முன்னெச்சரிக்கையாக 5 அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வரலாறு காணாத கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழப்பட்டதால் மீட்பு பணிகள் நடப்பதிலும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் 5 முதல் 6 நாள் வரை மின்சாரம் இல்லாத நிலை இருந்தது. பலரும் தங்களது வீடுகளை இழந்து உண்ண உணவும், தங்குவதற்கான இடமும் இல்லாமல் அடிப்படை வாழ்வாதரத்தை கூட இழந்து தவித்தனர். தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
தமிழ்நாட்டின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?
பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, இந்திய ராணுவம், காவல் துறை என பலரும் ஒன்றிணைந்து பணியாற்றினர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மேலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருடகளையும் அரசு வழங்கியது. தமிழ்நாடு அரசு மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியது.
இப்படிப்பட்ட சூழலில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய மத்திய அரசு, போதுமான நிதியை ஒதுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை" என்றார்.
இந்த நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது. இந்த சந்திப்பின்போது, வெள்ளபாதிப்புக்கு தேவையான நிவாரணத்தை வழங்கும்படி அனைத்துக்கட்சி குழு கோரிக்கை விடுக்க உள்ளது.