OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்... பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலவருமான ஓ.பன்னீர் செல்வம் முதன்முறையாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், நாளை காலை 10 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது. காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என ஓ.பன்னீர் செல்வம், பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சசிகலாவின் ஆடியோ விவகாரம், எடப்பாடி பழனிசாமி கட்சியில் செல்லுத்தும் ஆதிக்கம், மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தனது மகன் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு இடம் அளிக்காதது உள்ளிட்டவைகள் குறித்து பேசவே ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய வாய்ய்பிருப்பதாக தகவல்கள் வெளியான வேளையில் பாஜக உடனான கூட்டணிதான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வீ.சண்முகம் கூறிய நிலையில், பாஜக கூட்டணியால் அதிமுக தோற்கவில்லை என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். சி.வீ.சண்முகத்தின் இந்த கருத்து காரணமாகவே அமைச்சரவை விரிவாக்கத்தில் ஓபிஎஸின் மகனான ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு வாய்ப்பு அளிக்கவில்லை என கூறப்பட்டது.
அதிமுகவை கைப்பற்றுவதற்காக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசிவந்த நிலையில் தற்போது ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்க தொடங்கி உள்ளார். அதிமுக தொண்டர்களின் ஆதரவு சசிகலாவிற்கு பெருகி வருவது தொடர்பாக ஓ.பி.எஸிடம் பேசவே பாஜக தலைமை ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்துள்ளதாக அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் ட்வீட் செய்து பின்னர் அதை டெலீட் செய்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்ட நிலையில், தனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் எனக்கூறி விலகி இருந்தார் ஓபிஎஸ், மக்கள் பிரச்னைகள் குறித்து தினசரி தனியாக அறிக்கைகளை ஓபிஎஸ் வெளியிட்டு வந்த நிலையில், சசிகலாவுடன் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என ஓபிஎஸும் ஈபிஎஸும் இணைந்து அறிக்கை விடுத்திருந்தனர். அதுமட்டுமின்றி சசிகலாவுடன் பேசி வந்தவர்களை கட்சியில் இருந்து நீக்கியும் வந்தனர்.
ஊடகங்களுக்கு சசிகலா தொடந்து நேர்காணல் அளிக்கத் தொடங்கினார். என்னை எதிர்த்தவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை என கூறியதுடன், உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மதுசூதனனை கடந்த வாரம் சென்று சந்தித்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து ஓ.பன்னீர் செல்வம் மட்டும் தனியாக டெல்லி சென்றுள்ளார்