North Indians Safety : வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை.. திருப்பூர் எஸ்.பி. எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு இருப்பதாகவும், அவர்கள் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு இருப்பதாகவும், அவர்கள் குறித்து வதந்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் வினீத், காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதாலும் திருப்பூரில் தொழில் பாதிக்கப்படுவதாக பல்வேறு தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினிடம் தொடர்ந்து மனு அளித்திருந்தனர்.
இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வினீத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் , சமூக வலைதளங்களில் பரவுவது போல வட மாநில தொழிலாளர்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் ஆட்சியர் வினீத் கூறினார்.
மேலும் வடமாநில தொழிலாளர்களை தவறாக சித்தரித்து அதிகமாக மூன்று வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகிறது. அதில் ஒரு வீடியோ திருப்பூரில் கடந்த ஜனவரி மாதத்தில் பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வீடியோக்கள் வேறு பகுதியில் நடந்தது.
ஆனால் இவை அனைத்தும் திருப்பூர் மாவட்டத்தில் நடந்தது போல பரப்பப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வட மாநில தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏடிஎஸ்பி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
இவர்கள் வட மாநில தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். அதேசமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு அழைத்து தங்கள் புகார்களை தெரியப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொழி பிரச்சனை ஏற்படாதவாறு பல்வேறு மொழிகளை பேசக்கூடிய ஐந்து தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். அந்தந்த காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள பின்லாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொடர்ந்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இன்று பீகார் மாநில அனைத்துக் கட்சிக் குழு தமிழ்நாடு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு தமிழ்நாடு அரசுடன் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வும் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் சாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ஏதேனும் பிரச்சினையெனில் 94981-01300, 0421 - 2970017 என்ற சிறப்பு உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.