Narendra Modi Street | 'நரேந்திர மோடி தெரு' - தென்காசியில் பிரதமர் பெயரில் தெரு!
தென்காசியில் உள்ள தெரு ஒன்றிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
பிரபலமான முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் உள்ளிட்ட பலரது பெயரை தெருவுக்கு சூட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு தெருக்களுக்கு பெயர் சூட்டப்படுகின்றன. தற்போது பிரதமர் மோடியின் பெயரை ஒரு தெருவுக்கு சூட்டியுள்ள செய்தி வைரலாகி வருகிறது. அதுவும் முக்கியமாக அந்த தெரு தமிழ்நாட்டில் இருப்பது தான் பலரின் ஆச்சரியத்திற்கு காரணம். தென்காசியில்தான் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் ஒரு தெருவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிய பிரதமருக்கு தான் செலுத்தும் மரியாதை இந்த கோயில் என்று 37 வயதான மயூர் முண்டே எனும் நபர் புனேயில் கட்டியிருந்தார். முன்னதாக குஜராத்திலும் ஒருவர் கட்டியிருந்தார். இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு பலர் கோவில் கட்டி வந்த நிலையில் தென்காசியில் தெரு ஒன்றிற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென்காசியில் உள்ள வேலம்மாள் நகரில் உள்ள தெரு ஒன்றிற்கு மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி தெரு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு தெருவிற்கு முதன்முதலாக நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜகவினர் பலர் அதனை பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். மோடியை பற்றிய மற்றொரு ஆச்சரியமான தகவல் என்னவெனில், அவர் முதல்முறையாக எம்எல்ஏ ஆன போதே குஜராத் முதல்வரானவர். அதேபோலவே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான போதே பிரதமர் ஆனார். 1984-லிருந்து முதல்முறையாக மக்களவையில் பெரும்பான்மை அரசாக 2014ல் பாஜக அரசு அமைத்த பெருமை இவரையே சாரும். வாத்நகரில் உள்ள குஜராத்தி குடும்பத்தில் பிறந்த இவர், தந்தையின் தேநீர் கடையில் உதவி செய்து பின்னர் சொந்தமாக தேநீர் கடை வைத்து எளிமையாக வாழ்வை துவங்கியவர். 8 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் துவங்கிய இவரது பந்தம் இன்னும் தொடர்கிறது. இவர் 1985ல் பாஜகவில் இணைக்கப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, குஜராத்தின் புதிய முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்பிறகு தொடர்ந்து 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பதவி வகித்தார் மோடி. அதன்பின், கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில், பொது வாழ்க்கைக்கு பிரதமர் மோடி வந்து 20 ஆண்டுகளை இம்மாதம்தான் நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.