Myanmar : மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்..! மதுரை எம்.பி.க்கு இந்திய தூதர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா..?
மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து, மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு மியான்மர் இந்திய தூதர் பதிலளித்துள்ளார்.
மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக்கோரி தான் அனுப்பிய கடிதத்துக்கு மியான்மர் இந்தியத் தூதர் பதில் அளித்துள்ளதாக சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மியான்மரில் சிக்கித் தவிக்கும் 4 தமிழர்களை மீட்க வேண்டுமென்று நான் 21.09.2022 அன்று மியான்மரில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு இந்தியத் தூதர் வினய்குமார் பதில் அளித்துள்ளார்.
தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாக இந்திய மற்றும் வேறு சில அந்நிய நாடுகளின் இளைஞர்கள் ஏமாற்றி அழைத்து வந்து சட்ட விரோதமாக மியான்மரில் வைத்திருக்கிற ஒரு சர்வதேச மோசடி இதில் சம்பந்தப்பட்டுள்ளது. மியாவாடி என்கிற இடத்தில் அவர்கள் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த இடம் மியான்மர் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இல்லை.
ஆயுதம் தாங்கிய இனக் குழுக்களின் செல்வாக்கின் கீழ் அது உள்ளது. இங்கேதான் இந்திய மற்றும் அந்நியக் குடிமக்கள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளனர். இங்கிருந்து அங்கு பயணம் சாத்தியமில்லை. தாய்லாந்து முனையில் இருந்து அவர்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளனர். கிடைத்துள்ள தகவல்களின்படி 90 இந்தியர்கள் இந்த மோசடி வலைக்குள் வீழ்ந்துள்ளனர். அதில் 60 பேர் மியாவாடி பகுதிக்குள் மோசடி கும்பலால் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
நாங்கள் தொடர்ந்து மியான்மர் அரசுடனான ஒருங்கிணைப்புடன் நிலைமைகளை கவனித்து வருகிறோம். பல்வேறு வழிமுறைகள் வாயிலாக, வணிக சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி இந்தியர்களை மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம்.
காரணம் அந்தப் பகுதி உள்ளூர் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் முழுவதும் இல்லாத நிலை இருப்பதே. இதுவரை மியாவாடி பகுதியில் இருந்து 30 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் விரைவில் மீட்க முயற்சிகள் செய்து வருகிறோம்.
கடிதம் அனுப்பிய 24 மணி நேரத்துக்குள் பதில் தந்துள்ள மியான்மரின் இந்தியத் தூதருக்கு நன்றி. உங்கள் முயற்சிகள் வெற்றி பெற்று எல்லா இந்தியர்களும் மீடகப்படுவார்கள் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
”ஆன்லைனில் சட்ட விரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வருகிறது. அவர்கள் அத்தகைய சட்ட விரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாகத் தாக்கப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளனர். அவர்களை விரைவாக மீட்பதற்கு அரசின் உதவியை நாடுகின்றனர். மியான்மரில் சட்டவிரோதமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்க வேண்டும். மீட்டு, பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்துவரவும், மியான்மரில் உள்ள தூதரகத்திற்கு இப்பிரச்சினை குறித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கவேண்டும். இது தொடர்பாக பிரதமரின் அவசர தலையீட்டைத் கோருகிறேன்''.
இவ்வாறு தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.