சாதி மறுப்பு திருமணம் - பெற்றோரிடம் அனுப்புவது கொலைக்கு சமம் - மா. கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
சமூக விரோத சாதிவெறி சக்திகள் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு:
நெல்லையில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சமூக விரோத சாதிவெறி சக்திகள் மீது அரசு மற்றும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாதிவெறி செயல்கள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.
சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைப்போம் - பாலகிருஷ்ணன்:
சாதி மறுப்பு தலைவர்கள் பிறந்த மண்ணில் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் விரும்பும் நிலையில் தான் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பாதுகாப்பற்ற நிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்ய எங்களை நாடினால் அவர்களுக்கு பக்கபலமாக மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி அவர்களது திருமணத்தை செய்து வைக்கும். பெற்றோர்களிடம் அவர்களை ஒப்படைத்தால் கொலை களத்திற்கு அவர்களை அனுப்பி வைப்பதற்கு சமம்.
சமூகத்தின் கடமை - பாலகிருஷ்ணன்:
தமிழகம் முழுவதும் சாதி மறுப்பு திருமணங்களை காதல் திருமணங்களை செய்யும் தம்பதிகளை பாதுகாக்கும் பெரிய கடமை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரம் காலம் பின்னாடி உள்ள சாதிய சகதியில் மக்கள் இன்னும் ஊறி உள்ளனர். சாதியின் பெயரால் ஆணவ படுகொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிய அமைப்புகள் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணமாக உள்ளது. சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் இது போன்ற விவகாரத்தை அணைக்க விடாமல் பெரிதாக்கி உள்ளனர்.
மாஞ்சோலை விவகாரம்:
சாதிவெறி அமைப்புகள் மற்றும் கூலிப்படைகளை கட்டுபடுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி முதல்வரை சந்திக்க உள்ளது. அரசு தமிழ்நாடு தேயிலை தோட்ட நிறுவனத்தின் மூலம் மாஞ்சோலை தேயிலை நிறுவனத்தை எடுத்து நடத்த வேண்டும்” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணமும் - சூறையாடலும்:
முன்னதாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த மதன்குமார், உதய தாட்சாயினி ஆகிய காதல் ஜோடிக்கு, கடந்த 13ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி, வினோபா நகரில் அமைந்துள்ள சி.பி.ஐ(எம்) மாவட்டக் குழு அலுவலகத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் உள்ளிட்டோட் அக்கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக, பெண்ணின் தாய், தந்தை, சகோதரன், பந்தல் ராஜா உள்பட 15 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.