Stamp Duty Price Hike: 10 மடங்கு உயர்த்தப்பட்ட முத்திரை தாள் கட்டணம்..! பரிதவிக்கும் நடுத்தர மக்கள்..! என்னதான் காரணம்?
தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு உயர்த்திய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு உயர்த்திய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிக மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சில தினங்களுக்கு முன் இந்திய முத்திரை சட்டத்தில் மாநிலத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.
முத்திரைத்தாள்
ஒரு பரிவர்த்தனை நடைபெறும்போது வரியாக பணம் செலுத்துவது முத்திரை தாள் விற்பனை வழியாக அரசுக்கு சென்றடைகிறது. குத்தகை பத்திரம், கட்டுமான ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் பணபரிமாற்றமானது முத்திரைத் தாள் வழியாக நடைபெறுகிறது. பொதுவாக முத்திரை தாள் கட்டணம் பத்திரங்களுக்கு பத்திரம் மாறுபடும். பத்திரப்பதிவு செய்யும் போது முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவாளர் கட்டணம் என இரண்டையும் பதிவு செய்பவர் தான் கட்ட வேண்டும் என்பதே இப்போது உள்ள நடைமுறையாகும்.
இந்த முத்திரைத் தாள்களில் ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சட்ட மசோதாவின் படி, இனி முத்திரைத்தாள் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இனி ரூ.20க்கான முத்திரைத்தாள் கட்டணம் ரூ.200 ஆகவும், ரூ.100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,000 ஆகவும் உயர்ந்துள்ளது. விரைவில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பத்திரப்பதிவு அறிவிப்பு
முன்னதாக கடந்த மாதம் வெளியான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், பத்திரப்பதிவு கட்டணம் 4ல் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு 8.6.2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.
இதற்கிடையில்,வழிகாட்டி அமைப்பு மாற்றப்பட்டதால் பத்திரப்பதிவு செலவு அதிகமாகி இருந்தது. தற்போது முத்திரைத்தாள் கட்டணமும் உயர்த்தப்படுவதால் இனி பத்திரப்பதிவு செலவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. கடந்த 22 ஆண்டுகளில் முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டே முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இதனை அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.