ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீ தாய் புற்றுநோயால் மரணம் - மக்கள் வேதனை
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீயின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீயின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் தள்ளி கொலை:
கடந்தாண்டு அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை பரங்கிமலையில் உள்ள ரயில் நிலையத்தில் சத்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவி இளைஞர் ஒருவரால் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டார். சத்யஸ்ரீ ரயிலில் தள்ளிவிடப்பட்டதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடிக்க முயற்சிப்பதற்குள் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குற்றவாளி கைது:
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஒருதலை காதல் விவகாரத்தில் இந்த சம்பவம் நடைபெற்று வந்தது தெரிய வந்தது. சத்யஸ்ரீயை கொலை செய்தததாக துரைப்பாக்கம் அருகே பதுங்கியிருந்த சதீஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். ஆதம்பாக்கம் ராஜா மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகனான சதீஷூம், அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பெண் தலைமை காவலரின் மகளான சத்யஸ்ரீயும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் சத்யஸ்ரீயை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலையை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடியதில் சதீஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் மாற்றப்பட்டது. இதற்கிடையில் மகள் இறந்த துக்கம் தாளாமல் சத்யஸ்ரீ தந்தை மாணிக்கம் விஷம் குடித்து உயிரிழந்தார். சத்யஸ்ரீ தாயார் ராமலட்சுமி பரங்கிமலை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
சத்யஸ்ரீ தாய் மரணம்:
தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் ஒரே நேரத்தில் மகள் சத்யஸ்ரீ மற்றும் கணவர் மாணிக்கம் உயிரிழந்ததால் நிலைகுலைந்துப்போனார். மேலும் துக்கம் விசாரிக்க வந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காலில் விழுந்து ராமலட்சுமி கதறி அழுதது காண்போரை கண்கலங்கை வைத்தது. இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ராமலட்சுமி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.