தவெகவில் முக்கிய பொறுப்பு! விசிகவுக்கு டாட்டா சொன்ன ஆதவ்; திருமாதான் டார்கெட்!
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவை விமர்சித்தல்
விசிக துணை பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த ஆதவ் அர்ஜுனா, கடந்த சில நாட்களாக கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் அனைத்தும் விவாதப்பொருளாக மாறின. இருந்தும் விசிக தலைவர் திருமாவளவன் ஆதவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்தது விசிக மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும் விகடன் குழுமமும் நடத்திய அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். அதே நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜயும் பங்கேற்றார். இருவரும் இணைந்து மாறி மாறி திமுக அரசை கடுமையாக விமர்சித்தது பேசுபொருளானது.
அரசியல் கருத்துகள் பேச வேண்டாம்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கும் அழைப்பு விடுக்க, ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆதவ் பங்கேற்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அரசியல் கருத்துகள் எதுவும் தெரிவிக்க வேண்டாம் எனவும் ஆதவிடம் தெரிவித்துள்ளார் திருமா. ஆனால் அரசியல் கருத்துகள் பேச வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்பியும் அதனை துளியும் கேட்காமல், விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுகவை சரமாரியாக தாக்கி ஆதவ் அர்ஜுனா பேசியது திருமாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தயாரான திருமா, கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
ஆதவ் ஓயவில்லை
இதனையடுத்தும் ஆதவ் ஓயவில்லை ஆளும் கூட்டணியான திமுகவிற்கு எதிரான கருத்துகளை அள்ளி வீசிய வண்ணம் இருந்தார். திருமாவளவனும் ஆதவின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, ஆதவ் வேறு ஏதோ உள்நோக்க்த்துடன் செயல்பட்டு வருவதாக செய்தியாளர் சந்திப்பிலேயே வெளிப்படையாக தெரிவித்தார். திருமாவின் வாக்கு அப்படியே பலித்தது போல, சில மணி நேரங்களிலேயே விசிக வில் இருந்து தான் முழுமையாக விலகிக்கொள்வதாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.தனது கருத்துகள் அனைத்தும் விவாதப்பொருளாக மாறி இதனால் தனக்கும் தலைவர் திருமாவளவனுக்கும் இடையே விரிசல் ஏற்படுவதாகவும் இதன் காரணமாகவே தான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா சரியான திட்டதுடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நெருப்பை கொளுத்திப்போட்டதில் இருந்தே திருமாவுடன் ஆதவுக்கு முரண் தொடங்கியது. சொல்ல சொல்ல கேட்காமல் திமுகவை விமர்சிப்பது, அடிமட்ட தொண்டர்களை தன்பக்கம் வைத்துக்கொண்டு உள்கட்சி பூசலில் ஈடுபடுவது என அவ்வப்போது சில பிரச்சனைகளை உருவாக்கி வந்தார்.
இதனிடையே பெரிய பூகம்பமாக புத்தக வெளியீட்டு விழாவில் விஜயை பங்கேற்க வைத்தது அங்கு வேங்கைவயல் சாதிக்கொடுமையை வெளிக்கொண்டுவந்தவர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்தியது என அனைத்திலும் ஆதவின் கைவண்ணம் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு மறைமுகமாக ஆதவ் பி ஆர் வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.
வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்தது. அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வார இதழில் விஜய் கட்சி பற்றி நேர்மறையான ஒரு கணக்கெடுப்பு வெளியானது. இதனையும் ஆதவ் அர்ஜூனாவே வர வைத்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.