CM Stalin: தென்மாவட்டங்களில் பெருவெள்ளம், தத்தளிக்கும் தூத்துக்குடி..! முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு
CM Stalin: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார்.
CM Stalin: தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நேற்று, சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு:
வட மற்றும் தென்மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்வதற்கான நிவாரணம் வழங்குமாறு, பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து, நேற்று சென்னை வந்த அவர் சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் இருந்து, தென்மாவட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடனிருந்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, விவரங்கள் மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக புகைப்படங்களை கொண்டு முதலமைச்சருக்கு விளக்கமளித்தார். வீடியோ கால் மூலம் 4 மாவட்ட ஆட்சியர்களுடனும் ஸ்டாலின் விவரங்களை கேட்டறிந்தார். நேற்றே தூத்துக்குடி செல்லவிருந்த நிலையில், மத்தியக் குழு ஆய்வு காரணமாக அந்த திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி விரையும் ஸ்டாலின்:
இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். இதற்காக இன்று காலை 10.15 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார். காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறார். பின்னர் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்கிறார். ஆய்வை முடித்து கொண்டு இரவு 9.25 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு சென்னை வந்தடைகிறார்.
தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்:
மிக்ஜம் புயலால் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடயே, கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சில பகுதிகளில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும் அதிகமான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட, பல ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், ஏராளமான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வீடுகளில் முடங்கியுள்ளனர். பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் தென்மாவட்டங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்ததோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஆனால், பெருமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் நிலை என்ன என்பதே இதுவரை தெரியவில்லை.
தூத்துக்குடி நிலை என்ன?
பெருமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தூத்துகுடியின் நிலைமை தான் மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள களநிலவரம் என்ன என்பது அதிகாரிகளுக்கே முழுமையாக தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ள பாதிப்பில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று தான் பாதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் இருந்து வடியும் மேல் தண்ணீரும் தூத்துக்குடி வழியாக தான், கடலில் சேரும் என்பதால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.