Smart Meter: இனி மின்சார கட்டணம் இப்படி தான்..! குறையுமா? கூடுமா? தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திடீர் முடிவு
Smart Meter Tangedco: புதிய ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் ஒப்பந்தத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Smart Meter Tangedco: புதிய ஸ்மார்ட் மீட்டர் மூலம் ஆன்லைன் வாயிலாக ஆட்களே இன்றி மின்சார கட்டணத்தை கணக்கிட முடியும்.
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல்:
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, வீடுகளுக்கான மின் பயன்பாட்டை ஆட்களை கொண்டில்லாமல், தானியங்கி முறையில் கணக்கிடுவதற்கான ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை துரிதப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது. அண்மையில் மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. அதன் முடிவில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு புதிய டெண்டர் கோர அனைத்து தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறையும் கட்டணம்?
மேற்சொன்ன தகவல் உண்மையாகும்பட்சத்தில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு விரைவில் டெண்டர் கோரப்பட்டு, இறுதி செய்யப்பட்டு அனைத்து வீடுகளிலும் பொருத்தப்படும். அதன்படி, மின்சார பயன்பாடு துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்படும். அநாவசியமான கூடுதல் கட்டணங்களும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் மீட்டர் என்றால் என்ன?
மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்படுகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டரில் மாதந்தோறும் கணக்கெடுக்கும் தேதி, சாஃப்ட்வேர் வடிவில் அப்லோட் செய்யப்பட்டு, தொலைதொடர்பு வசதியுடன், அலுவலக, சர்வரில் இணைக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதி வந்ததுமே, தானியங்கி முறையில் மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் அதற்கான கட்டண விவரத்தை பயனாளருக்கு அனுப்பி விடும். இதற்காக, 4ஜி அலைவரிசையில் இயங்கும் வகையில் சிம்கார்டு வாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மின் கணக்கீட்டுக்கு புதிய சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு மாத இடைவெளியிலும், மின்பயன்பாட்டை கணக்கிட, மின்சார ஊழியர்கள் வீடு வீடாக செல்லும் பணிச்சுமை குறையும் என கூறப்படுகிறது.
அடுத்தடுத்து ரத்தான டெண்டர்கள்:
ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் என்பது அறிவிக்கப்படுவதும், தொடர்ந்து ரத்து செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டும், அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த டெண்டர் கோரப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது. 4 நிறுவனங்கள் இந்த டெண்டரில் பங்கேற்ற நிலையில், அதானி நிறுவனம் மிக குறைவான தொகையை குறிப்பிட்டு டெண்டரை கைப்பற்றியது. ஆனால், தமிழக அரசு நிர்ணயித்து இருந்த தொகையை விட அதானி நிறுவனத்தின் தொகை அதிகமாக இருந்ததால், அந்த டெண்டரை ரத்து செய்துவிட்டது. எனவே, ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரானது மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, இயக்குனர்கள் கூட்டத்தில் புதிய டெண்டர் கோர ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.





















