கரூர் : சமூக விரோதிகளின் புகலிடமாக மாறிய குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு : பயனாளிகள் கோரிக்கை என்ன?
கரூர் சணப்பிரட்டியில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் கரூர் ,சணப்பிரட்டியில் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு ரூ.9 கோடியே 60 லட்சம், மத்திய அரசின் நிதி ரூ.2 கோடியே 88 லட்சம், பயனாளியின் பங்களிப்பு தொகை ரூ.3 கோடியே 60 லட்சம் என்று மொத்தம் 16 கோடி மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
கரூர் பழைய ஆயுதப்படை அருகே உள்ள சணப்பிரட்டி பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மற்றும் வீட்டு வசதி வாரியம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில், வீடுகளை கட்டி அதற்கு உரிய தொகையை வழங்கிய பின் அவர்களுக்கு வீடுகள் ஒப்படைக்க ஒப்பந்த முறையில் அடுக்குமாடி குடியிருப்பு அப்பகுதியில் கட்டினர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை கட்ட பூமி பூஜையில் முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.
பின்னர், அதன் அருகில் குடியிருப்பவர்கள் அந்த இடத்தை தேர்வு செய்ததற்கு பல்வேறு விதமான போராட்டங்கள் செய்து குடியிருப்பு பகுதியை இவ்விடத்தில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தற்போது ஒரு நல்ல செயல் நடைபெறும்போது அதனை எக்காரணத்தைக் கொண்டும் தடுக்கக் கூடாது என வேண்டுகோள் வைத்தனர் .
அதைத் தொடர்ந்து, மிக பிரம்மாண்டமான முறையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு அந்த வீடுகளுக்கு தேவையான ஒவ்வொரு வீட்டிலும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, கழிவறை, மற்றும் குளியலறை உள்ளது. மேலும் தண்ணீர் வசதி, மின்சாரவசதி, சாலைவசதி, தெரு விளக்குகள், குப்பை தொட்டிகள் மற்றும் பூங்காக்கள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ளது. இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீடும் ரூ.8.38 லட்சம் மதிப்புடையதாகும்.
திட்டத்தில், கரூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற நகர்ப்புற ஏழை மக்களுக்கும் மற்றும் சாலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்திருந்த குடிசைவாசிகள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளின் பங்களிப்புத் தொகையுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்து ஓராண்டாகியும் இன்னும் வீடுகள் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படவில்லை. குடியிருப்பில் உள்ள பல வீடுகளின் கண்ணாடிகள் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இரவில் குடிமகன்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும், இந்த குடியிருப்பு மாறியிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே குடியிருப்பு வீடுகளை விரைந்து ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்று பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.