SETC Weekend Special: வார இறுதி நாட்கள்; ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கும் SETC - முழு விவரம்
வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டி, சென்னை மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்(SETC) அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து, வார இறுதியில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்(SETC) சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது காணலாம்.
மொத்தமாக 1,035 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டி, சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, நாளை முதல் 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,035 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சிறப்புப் பேருந்துகளின் விவரங்கள்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு, நாளை(19.09.25) 355 சிறப்புப் பேருந்துகளும், 20-ம் தேதி 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகர்கோவில், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு, நாளை(19.09.25) 55 சிறப்புப் பேருந்துகளும், வரும் 20-ம் தேதி 55 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 21-ம் தேதி, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 21-ம் தேதி மகாளய அமாவாசை என்பதால், அன்று ராமேஸ்வரத்தில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது வழக்கம். அதையொட்டி, வரும் 20-ம் தேதி, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து, ராமேஸ்வரத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மறுநாளான 21-ம் தேதி, ராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (SETC) தெரிவித்துள்ளது.






















