செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Senthil Balaji Bail Reaction: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தமைக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என்ன தெரிவித்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவருக்கு, சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், செந்தில் பாலாஜிக்கு கிடைத்த ஜாமீன் குறித்து என்ன தெரிவித்தனர் என்பது குறித்து பார்ப்போம்.
முதலமைச்சர் ஸ்டாலின் :
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!" என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பாமக தலைவர் ராமதாஸ்:
பாமக தலைவர் ராமதாஸ் தெரிவிக்கையில் “செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்:
செந்தில் பாலாஜி தியாகம் செய்துவிட்டா சிறைக்குச் சென்றார். செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது யார்.? திமுக . அதிமுக ஆட்சியில் இருந்தபோது, திமுக போட்ட வழக்கினால்தான் சிறைக்கு சென்று வந்துள்ளார். திமுக ஆட்சியில் செய்தால் வீர தீர செயலா.? எதிர்க்கட்சியில் செய்தால் ஊழல் குற்றச்சாட்டா.? என்று திமுக அரசை தாக்கி பேசியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்:
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்தாலும், சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் .
குற்றஞ்சாட்டப்பட்டவர் எந்த ஒரு அதிகாரத்தில் இருந்தாலும், மத்திய அரசின் அமைப்புகள் அவர்களது பணியை திறம்பட செய்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம், இந்த வழக்கு. முதலமைச்சரே, செந்தில் பாலாஜி ஊழல் குறித்து பேசியது மறந்துவிட்டாரா என்றும் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை:
ஒரு நல்ல அமைச்சரை சிறைப்பிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.