Senthil Balaji: மூன்றாவது முறையாக.. அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை அமலாக்கத்துறை சோதனையை நடத்தி அவர் கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஜூன் 21 ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்று அதாவது ஜீலை 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைக்கு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ கால் மூலம் ஆஜரானார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜரானார். அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவலை வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஏற்கனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து இது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்படுகிறது.