Seeman: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்னுடன் சேர்த்து 11 தமிழர்கள்; ஆனால்... - சீமான் சொல்வது என்ன?
Seeman Speech: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐபிஎல் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் சீமான். இவர் தனது தொண்டர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை உணர்ச்சி பொங்க பேசிய காணொலிகளை பார்த்திருப்போம். இதனாலே சீமான் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் சீமான் நேற்று அதாவது ஜனவரி 28ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தான் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஐபிஎல் லீக்கில் தமிழ்நாடு அணியாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 11 வீரர்களும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், அதில் தானும் ஒருவனாக இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். சீமானின் இந்த பேச்சுக்கு இணையவாசிகள் தொடங்கி கிரிக்கெட் ஆர்வலர்கள் வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதாவது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தனியார் அமைப்பு மூலம் நடைபெறுவது. மேலும் இதில் சர்வதேச வீரர்கள், உள்நாட்டு வீரர்கள் ஏலம் கோரப்பட்டு, அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் அணியின் தரப்பில் விளையாடுவார்கள். இப்படியான நிலையில், வீர்ரர்களுக்கும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பும் சௌகரியமும் ஏற்படுத்தி கொடுப்பதுடனும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பணி முடிந்துவிட்டது. இதற்குப் பின்னர் மத்திய மாநில அரசுகளின் பணி என்னவென்று பார்த்தால், “ வேடிக்கை” பார்ப்பது மட்டும்தான். இப்படியான நிலையில் சீமான் இவ்வாறு பேசியிருப்பதற்கு, நெட்டிசன்கள் கட்சிப் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் பேசுகிறார் என குறிப்பிட்டு வருகின்றனர்.