பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் - அண்ணாமலை
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
பள்ளி விடுதியில் தற்கொலை செய்த அரியலூர் மாணவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவப் பள்ளியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி படித்து வந்துள்ளார். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தினார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஹாஸ்டல் வார்டன் படிக்கவிடாமல் அதிக வேலை வாங்கியதே தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். அவரை, மதம் மாறுவதற்கு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆரம்பம் முதலே குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், அரியலூர் மாவட்டத்திலுள்ள தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கிராமத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவியின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய த,மிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது.. மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜக குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும். இந்த போராட்டம் எந்த மதத்திற்கு எதிரான போராட்டமும் இல்லை. மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர்.
தமிழக பாஜக மாணவியின் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பாஜக தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பாஜக போராடுகிறது. ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறுதான் இது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு மோசமாக கையாண்டு உள்ளது. அற்புதமான காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என்று தெரிவித்தார். மேலும் மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக தொடர்ந்து போராடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.