கோடநாடு வழக்கு; ‘யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்’ - சசிகலா அதிரடி அறிக்கை
அவரிடம் இரண்டாம் நாள் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார். அவரிடம் இரண்டாம் நாள் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சசிகலாவின் அறிக்கை
கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறேன் முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன். கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம். ஆனால் என்னை பொருத்தவரை, என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம், அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கோடநாடுதான். எங்களை பொருத்தவரையில் கோடநாடு பங்களாவை ஒரு கோயிலாகத்தான் பார்த்தோம். எங்கள்கட்சிக்காரர்களும் அப்படிதான் பார்த்தார்கள்.
இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில், விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் எங்களிடம் நெடுங்காலமாக பணியாற்றிய காவலாளி திரு. ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது. அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள். இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர்.
எனவே. காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிகளான எங்களது காவலாளி திரு.ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.
#JUSTIN | யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சசிகலா அறிக்கைhttps://t.co/wupaoCzH82 | #Sasikala #KodanadCase #Kodanad pic.twitter.com/nfFoj0EO5g
— ABP Nadu (@abpnadu) April 22, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்