Samathuva Virundhu: ‘சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து..’ : அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
சமூகநீதிப் பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமபந்தி போஜனத்தை சமத்துவ விருந்து என பெயர் மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தலைமைசெயலகத்தில் ஆதி திராவிடர் - பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், “சமூகநீதிப் பாதையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. வன்கொடுமை சம்பவங்களை தடுக்க எத்தனையோ முயற்சி எடுத்தாலும் ஆங்காங்கே சில பிரச்னைகள் நடக்கின்றன. வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் புதிய மாணவர் விடுதி அமைக்கப்படும் என்றும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளிகளில் ரூ.123 கோடியில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமபந்தி போஜனத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கோரிக்கை வைத்ததாகவும், அவரின் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சுதந்திர தினம் உள்ளிட்ட பல முக்கிய நாட்களில் தமிழ்நாடு அரசு சார்பில் சமபந்தி போஜனம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்