Salem Crime: புருஷன் வேலைக்கு போனதும்.. இன்ஸ்டா காதலனால் கொல்லப்பட்ட சுமதி.. சேலத்தை அலற வைத்த சம்பவம்!
தனக்கும் சுமதிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது எனவும், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அவரை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி 300 அடி பள்ளத்தில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்ஸ்டாகிராம் காதலியை கொன்ற வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது காதலியை கொலை செய்து விட்டு அவரது கணவனுக்கு தாலியை அந்த இளைஞர் அனுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள மாரமங்கலம் மலை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்தார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுமதி திரும்பி வரவில்லை. இதுதொடர்பாக சண்முகம் ஏற்காடு போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மாரமங்கலம் மலை கிராமத்திற்கு வந்த பேருந்து ஓட்டுநர் அங்கிருக்கும் மளிகை கடையில் பார்சல் ஒன்றை கொடுத்துள்ளார். இதனை சண்முகத்திடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி சண்முகம் அந்த பார்சலை வாங்கி பிரித்துப் பார்க்கையில் அதில் சுமதி அணிந்து இருந்த தாலி இருந்தது. உடனடியாக இதனை கொடுத்து அனுப்பியது யார் என சம்பந்தப்பட்ட பேருந்து டிரைவரிடம் சண்முகம் விசாரித்துள்ளார்.
அப்போது அதே மலை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை சந்தித்த சண்முகம் என்னுடைய மனைவி சுமதி எங்கே? ஏன் இந்த தாலியை உன்னிடம் கழற்றி கொடுத்துவிட்டு சென்றார்? என கேட்டு உள்ளார். அதற்கு சுமதிக்கு உன்னுடன் வாழ பிடிக்கவில்லை எனக்கூறி இதனைக் கொடுத்தார். ஆனால் எங்கு சென்றார் தெரியாது என தெரிவித்துள்ளார்.
இதனால் சண்முகத்திற்கு வெங்கடேஷ் மீது சந்தேகம் ஏற்பட, உடனடியாக போலீசில் இது தொடர்பாக தெரிவித்தார். அதன் பெயரில் போலீசார் வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் தனக்கும் சுமதிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது எனவும், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அவரை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி ஏற்காடு குப்பனூர் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவிலை அடுத்த வளைவில் 300 அடி பள்ளத்தில் வீசியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சாக்கு முட்டையில் கட்டி வீசப்பட்ட சுமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேஷை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினது. அதாவது இன்ஸ்டாகிராம் செயலி மூலம் மாரமங்கலத்தை சேர்ந்த சுமதிக்கும் வெங்கடேஷூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் போன் மூலமாக தங்கள் தொடர்பை வளர்த்துக் கொண்டவர்கள், பின்னர் நேரில் பார்த்து நெருங்கி பழகியுள்ளனர்.
சண்முகம் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது காபி தோட்டத்திற்கு சுமதியை வரவழைத்து அங்கு வெங்கடேஷ் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த பழக்கம் ஓராண்டாக நீடித்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெங்கடேஷின் போன் அழைப்பை சுமதி தவித்து வந்துள்ளார். மேலும் தனது சமூக வலைதளங்கள் மற்றும் செல்போனை பாஸ்வேர்டு போட்டு லாக் போட்டு வைத்துள்ளார்.
இதனை அறிந்த வெங்கடேஷ் உனக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா என கேட்டு சுமதியிடம் தகராறு செய்துள்ளார் மேலும் சுமதிக்கு இதுவரை ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தன்னுடன் சுமதி சரியாக பேசாததால் ஆத்திரத்தில் இருந்த வெங்கடேஷ் அவரை 23ஆம் தேதி மதியம் காபி தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்பு செல்போனை பாஸ்வேர்ட் போட்டு வைத்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற வெங்கடேஷ் துப்பட்டாவால் சுமதியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவரது உடலை மலை பாதையில் வீசியுள்ளார்.
மேலும் தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க தாலியை பார்சல் அனுப்பி வேறு நபருடன் அவர் ஓடி விட்டார் என கூறினால் நம்பி விடுவார் என வெங்கடேஷ் முடிவு செய்துள்ளார். அப்படி செய்த நிலையில் தற்போது தானாகவே வெங்கடேஷ் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





















