
Salem Leopard: சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்..? - தனியாக செல்ல வேண்டாம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
காருவள்ளி கரடு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு, வனத்துறையினர் 500 மீட்டருக்கு 2 பேர் என்ற விகிதத்தில், 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்துள்ள எலத்தூர், மூக்கனூர், பூசாரிப்பட்டி கரடு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 8 மாதமாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, டேனிஷ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், கேமரா பொருத்தி கண்காணித்தும், சிறுத்தை குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகள் மர்மமாக இறந்து கிடந்தன.
சேலத்தில் சிறுத்தை நடமாட்டம்:
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக எலத்தூர், ராமசாமிமலை, குண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, மக்கள் தெரிவித்து வந்தனர். அங்குள்ள நாயையும், ஆட்டையும் சிறுத்தை கடித்து சாப்பிட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சக்கரை செட்டிப்பட்டி கிராமத்தில் பட்டிக்குள் புகுந்து 6 ஆடுகளை அடித்து சாப்பிட்டது. இந்நிலையில், 6 மாதத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் காருவள்ளி ஊராட்சியில் உள்ள காருவள்ளி கரடு, கோம்பை கரடு பகுதிக்கு வந்த சிறுத்தை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு மாட்டை அடித்து சாப்பிட்டுள்ளது.
மாட்டை வேட்டையாடிய சிறுத்தை:
காருவள்ளி கிராமம் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது தோட்டத்தில் 3 மாடுகள், 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு, மாடுகளை கட்டி வைத்து விட்டு தூங்கி உள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்த போது, ஒரு மாட்டை காணவில்லை. தேடி பார்த்த போது, 200 அடி தொலைவில் மாடு கழுத்து மற்றும் பின் தொடை பகுதியில் விலங்குகள் கடித்து கொன்று, இழுத்து சென்று தின்றது தெரியவந்தது. இது குறித்து, அவர் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த டேனிஸ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், வனப்பகுதி, கரடு, வயல் வெளி ஆகிய பகுதிகளில் விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வுகள் செய்தனர். அப்போது, பல இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை கண்டறிந்தனர். தொடர்ந்து கால் தடங்களை கெமிக்கல் தண்ணீரில் கலந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கரட்டின் உச்சியில் சிறுத்தை உருவத்துடன் இருந்த விலங்கை பார்த்ததாக பொதுமக்கள் சிலர் கூறினர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
இதையடுத்து, சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்கோ, வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கோ செல்ல கூடாது எனவும், வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. 10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல் வெளிக்கு அனுப்ப கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காடையாம்பட்டி, ஓமலூர், மேட்டூர் வனப்பகுதிகளில் சிறுத்தை மாறி மாறி நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை தனியாக வந்துள்ளதா, ஜோடியாக வந்துள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல், உணவு தேவைக்கு ஏற்ப, வனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதால், அதை கண்காணிக்க முடியாமலும், கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காருவள்ளி கரடு பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு, வனத்துறையினர் 500 மீட்டருக்கு 2 பேர் என்ற விகிதத்தில், 20க்கும் மேற்பட்ட வன காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காருவள்ளி கரட்டை சுற்றியுள்ள கஞ்சநாயக்கன்பட்டி, மூக்கனூர், பூசாரிப்பட்டி, குண்டக்கல் ஆகிய ஊராட்சி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

