Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்திலும் சிறந்து விளங்கும் சேலம் மத்திய சிறைச்சாலை கைதிகள்.
தவறு செய்து விட்ட மனிதன் அதிலிருந்து திருந்துவதற்காகவே நீதிமன்றம் தண்டனைகளை விதிக்கிறது. தண்டனைக்குள்ளானவர்கள் அடைக்கப்படும் சிறைச்சாலைகள், அவர்களை அந்த தவற்றின் பிடியிலிருந்து மீட்கத் தொடங்கும்போது குற்றம் குறைந்து மீண்டும் மனிதம் மலர்கிறது.
இதுபோன்றதொரு நடவடிக்கையை சேலம் மத்திய சிறை நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் திருக்குறள், கைதிகளின் மன அழுத்தம் நீங்க விளையாட்டுடன் கூடிய உளவியல் பயிற்சி, எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ் பயிற்சி என தொடர்ச்சியாக பல்வேறு மனித நேய நடவடிக்கைகளில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறை:
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறையில் தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில், சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தொழிற் பயிற்சி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
சிறைக்கு வருவதற்கு முன்னர் நல்ல முறையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனித்திறமைகள் கொண்ட சிறைக்கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாயிலாக மற்ற சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பரோட்டா மாஸ்டர் பயிற்சி:
இதன் ஒரு பகுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பரோட்டா மாஸ்டர் பயிற்சியினை சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வினோத் தொடங்கி வைத்தார். முழுமையாக அனைவருக்கும் பரோட்டா மாவு வழங்கப்பட்டு செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டது.
மேலும், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, சிறு வணிகக்கடை வைத்தல் போன்ற பயிற்சியை வாரம் தோறும் வழங்கவும் சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சிறை பஜார்:
மேலும், சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதிகளை வைத்து "பிரிசன் பஜார்" என்ற பெயரில் பிஸ்கெட், பிரட், பன், காரச் சேவ், மிக்ஸர், முறுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிறையில் தயாரிக்கப்படும் பிரட் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளை கொண்டு பிரிசன் பஜாரில் புதிதாக டீ, காபி, முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ், உளுந்த வடை, மசால் வடை, முட்டை போண்டா, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிஸ்கட் வகைகள், லட்டு, பாதுஷா, சமோசா, மைசூர் பாகு, இட்லி, ஊத்தாப்பம், பூரி, பொங்கல், ஆனியன் தோசை, மசால் தோசை, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டு கைதிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கல்வியிலும் டாப்:
இது மட்டுமின்றி, கல்வியிலும் சேலம் மத்திய சிறை சிறைவாசிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சேலம் மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் தவறை உணர்ந்து திருந்த நினைப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களாக மாற்றம் பெறுவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.