Salary Cut for Employees: தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் கிடையாது: மதுரையில் வெளியான மின்வாரிய அறிவிப்பு!
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை மின்வாரிய மண்டலத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், 2 தவணை தடுப்பூசியையும் வருகின்ற 7 ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும், ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் கூட டிசம்பர் மாத ஊதியத்தை நிறுத்திவைக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படாது என மதுரை மண்டல தலைமை பொறியாளர் உமா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவே அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டதாகவும், தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க இதுவரை 125 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி 79.29 லட்சம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 45. 71 லட்சம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதில், வடகிழக்கு பருவமழையின் காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தென்னாப்பிரிக்க, சீனா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொண்டு, அறிகுறி காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் விமான நிலையங்களில் சுகாதாரத்துறையின் சார்பில் தனித்தனியே தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, மருத்துவர்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் முதல் தவணையாக 77.33 சதவீதம் நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 42.10 சதவீதம் நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்