Armstrong Case Encounter: மீண்டுமா..! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொலை
Armstrong Case Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Armstrong Case Encounter: போலிசார்டமிருந்து தப்பிக்க முயன்றதால், ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீசிங் ராஜா சுட்டுக்கொலை:
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர், நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து கைது செய்யப்படார். தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நீலாங்கரை பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார் நடத்திய என்கவுன்டரில் சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இரண்டாவது என்கவுன்டர்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக தமிழக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 8 பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர். அவர்களில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை, கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். அதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான சீசிங் ராஜாவும் தற்போது என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார். இதனிடையே, சென்னையில் கடந்த வாரம் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்பவரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடரும் தீவிர விசாரணை:
கடந்த ஜுலை மாதம் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் சரணடைந்தனர். விசாரனையில் அண்ணனின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்றதாக, அவர் வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக,தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவர் என்று கூறப்படுகிறது.