Rithanya Death: ’’எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா..பெருமையா இருக்கு” ரிதன்யாவின் தந்தை பேச்சால் சர்ச்சை!
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக, திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ரிதன்யாவின் தந்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் அருகே அவினாசியில் பின்னலாடை நிறுவன தொழிலதிபர் அண்ணாதுரை. இவரின் மகள் ரிதன்யாவுக்கும் கவின்குமார் என்னும் வரனுக்கும் இரண்டரை மாதங்கள் முன்பு, கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் நடைபெற்றது. 500 பவுன் நகை வரதட்சணையாகக் கேட்கப்பட்டு, 300 பவுன் நகை மணமகள் வீட்டில் அளிக்கப்பட்டது. இதில் மீதி 200 பவுன் நகையைக் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது.
அனுசரித்து வாழும்படி அறிவுரை
இதுகுறித்து ரிதன்யா தன் தந்தையிடம் கூறியபோது, குடும்ப வாழ்க்கையை அனுசரித்து வாழும்படி அறிவுரை கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரிதன்யா, தன் தந்தைக்கு வாட்ஸப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மகளின் மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் ரிதன்யாவின் தந்தை அளித்த பேட்டி:
’’என் பொண்ணு செஞ்ச தவற, இனி உலகத்துல எந்தப் பொண்ணும் தயவுசெஞ்சு செஞ்சிடக் கூடாது. வாழ எத்தனையோ வழிகள் இருக்கு. 25 வயசு வரை காப்பாத்துன அப்பா, அம்மா சாகற வரைக்கும் காப்பாத்தாம உட்ற மாட்டாங்க.
ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா
மாற்று வாழ்க்கை அமைக்கறது அவங்க அவங்க மனநிலையைப் பொறுத்தது. எம்பொண்ணு ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இறந்துட்டா.. பொண்ணை இழந்தாக் கூட அதுல எனக்கு பெருமையாத்தான் இருக்கு.
எல்லாப் பொண்ணும் அப்படி இருக்கணும்னு நான் நினைக்கல. வாழ வழி இருக்கு. இது தவறான முடிவு. அப்பா, அம்மா ஒத்துக்கலைன்னாலும் அவங்களோட சண்டை போட்டுட்டு, இருங்க. தயவுசெஞ்சு உயிரை மாய்ச்சுக்காதீங்க’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல
இதில், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதைப் பெருமையாக நினைப்பதாக அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இணையுடன் ஒத்துவரா விட்டால் தனித்து வாழ்தலோ, புரிதல் கொண்ட மற்றொருவரை மறுமணம் செய்வதோ ஒன்றும் குற்றமோ, அசிங்கமோ அல்ல என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.






















