கடத்தப்படவிருந்த போதைப்பொருள்.. பொடி வைத்து பிடித்த அதிகாரிகள்.. சென்னை துறைமுகத்தில் பரபர!
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் கடத்தப்படவிருந்த சூடோ எபிட்ரின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கடத்தப்படவிருந்த 112 கிலோ சூடோ எபிட்ரின் பறிமுதல் செய்துள்ளது. கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவுக்குச் கடத்தப்படவிருந்த சரக்குப் பெட்டகம் ஒன்றை சென்னை துறைமுகத்தில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர்.
100 கிலோவுக்கு மேல் போதைப்பொருள் கடத்த முயற்சி:
அந்த சரக்குப் பெட்டகத்தில் 450 மூட்டைகளில் தலா 50 கிலோ குவார்ட்ஸ் பவுடர் இருந்தது. மூட்டைகளை தனித்தனியாக பரிசோதித்ததில், மொத்தம் 450 மூட்டைகளில் 37 குவார்ட்ஸ் தூள் மூட்டைகளின் அடிப்பகுதியில், தலா 3 கிலோ சூடோ எபிட்ரின் கொண்ட 37 பாக்கெட்டுகள் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
112 கிலோ சூடோ எபிட்ரின் போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1985-ம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் பரபரப்பு:
இந்த சோதனையின் போது, குற்றவாளிகள் பயன்படுத்திய 2 சொகுசு கார்கள் மற்றும் 3.9 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சூடோ எபிட்ரின் போதைப்பொருள் (என்.டி.பி.எஸ்) சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மெத்தாம்பேட்டமைனின் சட்டவிரோத உற்பத்திக்கு முன்னோடியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வழக்கில் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன.