நீலகிரியில் நிற்காமல் பெய்யும் மழை! அவலாஞ்சியில் 35.3 செ.மீ.. கடும் குளிரில் ஊட்டி
ஊட்டியின் அழகிய சுற்றுலா தளமான அவலாஞ்சியில் 35 செ.மீ கனமழையும், மேல் பாவனியில் 30 செ.மீ மழையு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை மற்றும் நீலகிரியில் பெய்த மழை அளவு எவ்வளவு என்பதை காண்போம்
தென்மேற்கு பருவமழை:
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்பே துவங்கியுள்ளது.
இதன் காரணமாக நேற்று முன் தினம் முதல் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது, நேற்று நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடலூர் மற்றும் பந்தலூரில் கனமழையானது விடாமல் பெய்து வருகிறது.
நேற்று பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தீயணைப்பு துறையினர் உடனடியாக மரங்களை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் கடுமையான குளிர் நிலவியது.
இன்றும் ரெட் அலர்ட்:
நீலகிரியில் இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களை மூட மாவட்ட நிர்வாகம் நேற்றே அறிவிப்பை வெளியிட்டது, இதன் அடிப்படையில் படகு இல்லம், பைன் காடுகள், அவலாஞ்சி, தாவரவியல் பூங்கா, பைக்காரா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவலாஞ்சியில் 35 செ.மீ மழை:
ஊட்டியின் அழகிய சுற்றுலா தளமான அவலாஞ்சியில் 35 செ.மீ கனமழையும், மேல் பாவனியில் 30 செ.மீ மழையு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கூடலூரில் 15 செ.மீ, பந்தாலூரில் 14 செ.மீ அளவில் அதிகனமழையானது பெய்துள்ளது. மேலும் கனமழை காரணமாக பவானி ஆற்றுக்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையின் அளவு:
அருவிகளில் வெள்ளப்பெருக்கு:
தென்மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழையானது பெய்து வருகிறது, இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. நேற்றை தினத்தில் ஐந்தருவியில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






















