Jayalalithaa: ஜெ., மரண வழக்கில் எய்ம்ஸ் அறிக்கையை நிராகரிக்க காரணம் இதுதான்: உண்மையை உடைத்த நீதியரசர் ஆறுமுகசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்ததற்கான காரணம் இது தான் என முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையை நிராகரித்ததற்கான காரணம் இது தான் என முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்து வந்த ரிப்போர்ட் மட்டுமே ஜெயலலிதா மற்றும் அவரது உடல் நிலை குறித்த அப்டேட்டுகளாக இருந்தது. முதலில் சாதாரண காய்ச்சல் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்ததாக கூறப்பட்டது.
அதன் பின்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பலருக்கும் சந்தேகம் எழுந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள் எழுந்தது. குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் அவரது அணியில் இருந்த பலரும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறிவந்தனர். அதிமுக தரப்பில் பலரும் பல வகையில் பேசி வந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் முழு விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார் ஆறுமுகசாமி. தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட விசாரணை அறிக்கை கடந்த அக்டோபர் மாதம் 18 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. பலருக்கு பல சந்தேகங்கள் எழுந்தன. அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை என பலரும் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில்,
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு ஆரம்பம் முதலே இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. அதனால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என மூன்று மருத்துவர்கள் கூறியதாக அறிக்கை வெளியானது. அதேநேரத்தில், ஒரு இதய நோயாளிக்கு மருத்துவர்கள் ஏன் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கவில்லை என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. சிகிச்சை முறை குறித்து மருத்துவர்கள் கூறியது முரணாக இருந்தது. இதனாலேயே, எய்ம்ஸ் அறிக்கை நிராகரிக்கப்பட்டது” என அவர் பேசினார்.