Rangamma Paati Passes Away: மூத்த நடிகை ரங்கம்மாள் பாட்டி காலமானார்..
பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார்.
பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் காலமானார்.
85 வயதான இவர், கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ரங்கம்மாள் பாட்டி நடிகர் எம்.ஜி.ஆர் நடித்து 1967ல் வெளி வந்த விவசாயி திரைப்படத்தில், தயாரிப்பாளர் சின்னப்பா தேவரால் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தற்போது உள்ள அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் வரை பல நடிகர்களுடன் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேல் நடித்த ஒரு திரைப்படத்தில், “போறது தான் போற ந்தா அந்த நாயக் கொஞ்சம் சூன்னு வெரட்டிட்டுப் போ” என ஒரு பாட்டி சொல்லும் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.
இந்நிலையில கடந்த சில மாதங்களாக சினிமா வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில், வயோதிகம் காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த அவர், சொந்த ஊரான தெலுங்குபாளையத்துக்கு திரும்பினார். நாற்பது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்தாலும் பெரிதாக ஏதும் சம்பாதிக்காத அவர், வீடு ஏதுமின்றி வாடகைக்கு கூரை வீட்டை ஒன்றை எடுத்து தங்கி இருந்தார். அவரை அவரது சகோதரிகள் மற்றும் அவரது மகன் கவனித்து வந்தனர்.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டியின் வறுமை நிலை ஊடகங்கள் மூலமாக தெரியவந்தது. வறுமையில் வாடி வந்த நிலையில் சினிமாத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் நடிகர் சங்கத்தினர் உதவ வேண்டும் என ரங்கம்மாள் பாட்டி வலியுறுத்தி இருந்தார். அப்போது ”சினிமா துறையில் என்னுடன் நடிக்காத நடிகர்களே இல்லை. போதுமான அளவு சினிமா துறையில் பெயர் எடுத்துள்ளேன். கடைசி காலத்தை இங்கேயே கழித்துவிட உள்ளேன். தங்குவதற்கு ஒரு வீடு, சாப்பிடுவதற்கு உணவும் கிடைத்தால் போதும். அதற்கு யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவினால் கடந்த சில மாதங்களாக ரங்கம்மாள் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள வீட்டில் ரங்கம்மாள் உயிரிழந்தார். தெலுங்குபாளையம் பகுதியில் ரங்கம்மாளின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்