Rameswaram: வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதா ராமேஸ்வரம் - புண்ணியஸ்தலத்தில் நடப்பது என்ன..?
வடமாநில குற்றவாளிகளின் புகலிடமாக மாறி விட்டதா ராமேஸ்வரம் - நாள்தோறும் கைது செய்யும் வெளி மாநில போலீசார்…புண்ணியஸ்தலத்தில் நடப்பது என்ன..?
வட மாநிலங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி ராமேஸ்வரத்தில் பதுங்கி இருந்த இரு வேறு வழக்குகளின் ஐந்து முக்கிய குற்றவாளிகளை அம்மாநில போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் வடமாநில குற்றவாளிகள் புகலிடமாக ராமேஸ்வரம் மாறிவிட்டதா என உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற மிக முக்கிய சுற்றுலா தளம் மற்றும் ஆன்மீக தலங்களில் ஒன்று என்பதால் இங்கு தினசரி தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பெரும்பாலானோர் சுவாமி தரிசனம் செய்து விட்டு ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு சொந்த ஊர் சென்று விடுகின்றனர்.
ஆனால் வடமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 4 முதல் 5 நாட்கள் தனியார் தங்கும் விடுதிகளில் குடும்பத்துடன் தங்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதனால் தான் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் பெரும்பாலான வடமாநிலத்தவர்கள் இருந்து வருகின்றனர்.சுற்றுலா மற்றும் சுவாமி தரிசனத்திற்கு அதிகமான வட மாநிலத்தவர்கள் ராமேஸ்வரத்தில் தங்கியுள்ளதால் வடமாநிலங்களில் கொடூர குற்ற செயல்களை செய்யும் குற்றவாளிகள் போலீசில் இருந்து தப்பிக்க ராமேஸ்வரத்தில் வந்து பதுங்கி இங்கு வடமாநிலத்தவர்களுடன் கலந்து வாழ்வதை சமீப காலமாக வாடிக்கையாக்கி வருகின்றனர்.
இதனிடையே பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி ஒரே நாளில் துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு மூன்று கொலைகள் செய்த பீஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த மண்டு சர்மா மற்றும் பிகார் மாநிலம் காட்ஜ்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் குமார் ஆகிய இருவர் போலீசாரிடம் தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
இந்த மூன்று கொலை தொடர்பாக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இருவரது செல்போன் சிக்னல் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாட்னா சிறப்பு அதிரடி படை சார்பு ஆய்வாளர் தலைமையில் நான்கு போலீசார் இருவரையும் தேடி கடந்த வியாழக்கிழமை மதியம் ராமேஸ்வரம் செல்போன் சிக்னல் அடிப்படையில் தேடி வந்தனர்.
இருவரும் அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் வழியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸ் உதவியுடன் இருவரையும் பிடித்து ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் வைத்து முதல் கட்ட விசாரணை செய்து பின்னர், பீகார் மாநிலம் முசாபர்பூர் அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 12ஆம் தேதி ஒடிசா மாநிலம் காண்ஜம் மாநிலம் கபி சூர்யா நகர் பகுதியில் பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வது, கத்தி மற்றும் துப்பாக்கிகளை காட்டி கொள்ளை அடிப்பது, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பப்பு நாயக், சுமந்த், தாஸ் ஆகிய மூவரும் காண்ஜம் மாநிலம் கபி சூர்யா பகுதிகளில் இருந்து தப்பித்து தலைமறைவாகினர்.
இவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த கபி சூர்யா போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இவர்கள் மூவரும் பெங்களூரில் சில நாட்கள் தங்கி இருந்துள்ளனர். அவர்களை பிடிக்க போலீஸ் நெருங்கவும் அறிந்த அவர்கள் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு மதுரை வந்து அங்கு அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர்.
நீண்ட நாட்கள் காரணமின்றி தங்கும் விடுதியில் தங்க முடியாததால் ராமேஸ்வரத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகம் இருப்பதை அறிந்து ராமேஸ்வரத்திற்கு சென்றால் அங்கு சுதந்திரமாக பதுங்கி இருக்கலாம் என்பதற்காக கடந்த வாரம் ராமேஸ்வரம் வந்து திருக்கோயில் வடக்கு வாசலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து சுதந்திரமாக ராமேஸ்வரம் பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து ராமேஸ்வரத்தில் இருப்பதை அறிந்து அவர்களை தேடி போலீசார் நால்வர் வியாழக்கிழமை ராமேஸ்வரம் வந்து தங்கி, வெள்ளிக்கிழமை மாலை மூவரையும் பிடித்து ஒடிசா மாநிலம் காண்ஜம் கபி சூரிய நகருக்கு கையில் விலங்கு போட்டு அதன் மீது துண்டை வைத்து சுற்றி அரசு பேருந்தில் மதுரை அழைத்து சென்று அங்கிருந்து ரயில் மூலம் ஒரிசா அழைத்துச் சென்றனர்.
ராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு சில தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களின் விவரங்கள் சரியாக சேகரிக்காமல் தங்க வைப்பதால் வட மாநிலங்களில் கொடூர குற்றங்களில் ஈடுபட்டு விட்டு ராமேஸ்வரத்தில் வந்து பதுங்கி விடுகின்றனர். மேலும் சில தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த படாமலும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்காததால் சமீப காலமாக இவ்வாறு முக்கிய குற்றவாளிகள் வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்து தங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமேஸ்வரத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகம் இருப்பதால் குற்றவாளிகள் சுதந்திரமாக பதுங்கி இருப்பதற்கான ஏதுவான சூழ்நிலை இருப்பதால் ராமேஸ்வரத்தை தேர்வு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தனியார் தங்கும் விடுதியில் தங்க வரும் வாடிக்கையாளர்களை முறையாக சோதனை செய்து சந்தேகபடும் படியான நபர்கள் என்றால் அவர்களுடைய அடையாள அட்டைகளை காவல் நிலையங்களை ஒப்படைத்து சரிபார்த்து தங்க வைக்க வேண்டும் என போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பதுங்கும் வடமாநில குற்றவாளிகள் அம்மாநில போலீசார் கைது செய்யப்படவில்லை என்றால் ராமேஸ்வரம் சுற்று வட்டார பகுதிகளில் குற்றவாளிகள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட அதிகம் வாய்ப்புள்ளது. ராமேஸ்வரம் உள்ளூர் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மாவட்ட காவல்துறை ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்ட போது ராமேஸ்வரத்தில் தங்கி உள்ள வட மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பதாக ராமேஸ்வரம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை எந்தவித கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. எனவே காவல் நிலையங்களில் ராமேஸ்வரத்தில் தங்கி உள்ள வடமாநிலத்தவர்களின் தகவல்களை சேகரித்து உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜெரோன் குமார் கேட்டு கொண்டுள்ளார்.
ராமேஸ்வரம் கோயிலை சுற்றி பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளதால் விடுதிகளில் தங்க வரும் வாடிக்கையாளர்களின் தகவல்களை முறையாக சேகரிப்பது இல்லை. இதன் காரணமாக ராமேஸ்வரத்தில் வட மாநிலங்களில் கொடும் குற்றம் செய்து விட்டு இங்கு வந்து தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வடமாநிலத்தவர்கள் ராமேஸ்வரத்தில் தங்கி உள்ளனரா என சோதனை செய்து உள்ளூர் பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என வழக்கறிஞர் ராமமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரையை தொடர்பு கொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. இருப்பினும் இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் பேசும் போது குற்ற சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து வட மாநில குற்றவாளிகளையும் அம்மாநில போலீசார் நேரடியாக வந்து கைது செய்துள்ளனர.; இருப்பினும் ராமேஸ்வரத்தை சுற்றி உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வட மாநிலத்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் பதுங்கி இருந்த வடமாநிலத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் அடுத்தடுத்து அம்மாநில போலீசார் கைது செய்யப்பட்டு அழைத்து சென்றது ராமேஸ்வரம் உள்ளூர் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.