ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை..!
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாளை 150 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நடைமுறைக்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் கருவியாகவும், வாழ்வாதார சக்தியாவும் அத்திட்டம் திகழ்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கிராமங்களில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கும் இந்தத் திட்டம்தான் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டத்தின்படி வழங்கப்படக்கூடிய அதிகபட்ச வேலை நாட்களை நேற்று 27-ஆம் தேதி வரை 2 லட்சத்து 34 ஆயிரத்து 071 குடும்பங்கள் பணி செய்து முடித்து விட்டன. கொரோனா பாதிப்பு எப்போது தீரும் என்பது தெரியாத நிலையில், அடுத்து வரும் மாதங்களில் அந்தக் குடும்பங்கள் வேறு வாழ்வாதாரமும் இல்லாமல், ஊரக வேலையும் இல்லாமல் எப்படி வாழ முடியும்?
இத்திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் வரும் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட மொத்த நிதியான ரூ.36,641 கோடியில் இதுவரை ரூ.29,569 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள நிதியைக் கொண்டு 2 வாரங்களுக்குக் கூட வேலை வழங்க முடியாது. அதன்பின் அடுத்த 10 வாரங்களுக்கு நிதி இருக்காது என்பதால் இந்தத் திட்டத்தையே வாழ்வாதாரத்திற்காக நம்பியிருக்கும் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த முதல் 6 மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2580 கோடியில் இதுவரை 62%, அதாவது ரூ.1601 கோடி செலவழிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாகவும், தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட காலத்தில் 100 நாட்கள் வேலை நடக்காததாலும் மக்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பணிகள் வழங்கப்பட்டன. இப்போது அதிக குடும்பங்கள் வேலை கோரும் நிலையில், இருக்கும் நிதியைக் கொண்டு அவர்களுக்கு வேலைவழங்க வாய்ப்பில்லை.
இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு காரணம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி பெருமளவில் குறைக்கப்பட்டது தான். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஒரு லட்சத்து 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் அது 35% குறைக்கப்பட்டு, ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது கொரோனா பாதிப்புக்கு முந்தைய 2019-20 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.71,686 கோடியை விட சற்று தான் அதிகமாகும். அந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 24.85 கோடி மனித நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. 2020-21 ஆம் ஆண்டில் இது 33.40 கோடி மனித நாட்களாக, அதாவது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்தது. நடப்பாண்டில் சுமார் 40 கோடி மனித நாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதற்கு குறைந்தபட்சம் ரூ.11,437 கோடியாவது தேவை. ஆனால், நடப்பாண்டில் தமிழகத்திற்கு அதிகபட்சமாக அதில் பாதியளவுக்குக் கூட கிடைக்காது. இது போதுமானது அல்ல.
இந்திய அளவில் எடுத்துக் கொண்டாலும் கூட இதே நிலை தான். கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட 389 கோடி மனித நாட்களை விட சற்று கூடுதலாக 400 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க வேண்டுமானால் கூட, மத்திய அரசு மட்டும் ரூ.1,13,500 கோடி ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கினால் மிக மோசமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு 150 நாட்கள் வேலை வழங்கலாம். எனவே, 2021-22 ஆம் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படியான வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவதுடன், வேளாண் பணிகளுக்கும் இத்திட்டத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் 50% உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.