Rajinikanth: “ஜெயலலிதாவை எதிர்த்ததற்கு இதுவும் முக்கிய காரணம்“.. RMV ஆவணப்படத்தில் ரஜினி பேசியது என்ன.?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை தான் எதிர்த்ததற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து, புதிய வீடியோ ஒன்றில் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். அப்படி என்ன கூறியுள்ளார்.? பார்ப்போம்...

தமிழ் திரையுலகின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ஜெயலலிதாவை தான் எதிர்த்ததற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று என்று ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ள வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மறைந்த முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன் நினைவு நாளில் வெளியான ஆவணப் படத்தில், ரஜினிகாந்த் அந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஜெயலலிதா - ரஜினிகாந்த் இடையேயான மோதல் போக்கு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 1996-ல், முதலமைச்சராக இருந்தபோது, நடிகர் ரஜினிகாந்த் கருப்பு பணம் வாங்கினாரா இல்லையா என்று கேட்டு, ரஜினி குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார். இதற்கு, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் துணிச்சலாக விளக்கமளித்த ரஜினிகாந்த், தன்னுடைய பெயரை பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம் என்றும், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தனக்கும், அரசியல் என்ற விஷ ஆயுதத்தை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தன்னுடைய ரசிகர்களை இழக்க தான் தயாராக இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், தான் கருப்பு பணம் வாங்கவில்லை என சொன்னால் அது பொய் என்றும், பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் கருப்பு பணம் வாங்கி இருப்பதாகவும் கூறியிருந்தார். பிறகு, தான் செய்வது தவறு என்பதை உணர்ந்து கருப்பு பணம் வாங்குவதை குறைத்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். திரைத்துறையை சேர்ந்தவராக இருந்து கொண்டு இதை பற்றி நன்கு தெரிந்திருக்கும் ஜெயலலிதாவே கருப்பு பணம் குறித்து கேள்வி எழுப்புவதை என்னவென்று சொல்வது என தெரியவில்லை என்று கூறிய அவர், ஒரு மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் இப்படி ஒரு கீழ்த்தரமான விஷயத்தை செய்வது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு, திரைத்துறையில் அதிகமாக வருமான வரி கட்டும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும், தன்னிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் கூறியிருந்தார். இவ்வளவு ஆன பிறகு கூட ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்றால், அவர் வாழ்க்கையில் என்றுமே மாறமாட்டார் எனவும் கூறினார் ரஜினிகாந்த். முதலில் அவருக்கு இருந்தது பண வெறி, இப்போது அவருக்கு இருப்பது பதவி வெறி, அவர் என்னைக்குமே மாறமாட்டார் என மிகவும் துணிச்சலாக பேட்டி அளித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.
புதிய ஆவணப் படத்தில் ஜெயலலிதாவை எதிர்த்ததற்கு ஒரு முக்கிய காரணம் குறித்து விளக்கம்
மறைந்த முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.எம். வீரப்பன், ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர். சத்யா மூவீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், ஏராளமான வெற்றிப் படங்களை தயாரித்தவர் ஆர்.எம். வீரப்பன். அவரது நினைவு நாளில் வெளியான ஆவணப் படத்தில் பேசியுள்ள ரஜினிகாந்த், சத்யா மூவீஸ் தயாரிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தின் 100-வது நாள் விழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியபோது, மேடையில், அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பனும் இருந்ததால், ஜெயலலிதா அவரை பதவியை விட்டே நீக்கிவிட்டதாகவும், அது தனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி, இரவெல்லாம் தூங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், அடுத்த நாள் காலை, மன்னிப்பு கேட்பதற்காக ஆர்.எம். வீரப்பனிடம் ரஜினிகாந்த பேசியதாகவும், ஆனால் அவர், எதுவுமே நடக்காததுபோல் தன்னிடம் பேசியதாவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இதற்காக நீங்கள் வருத்தப்படாதீர்கள், வழக்கம்போல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று ஆர்.எம்.வீ தெரிவித்ததாகவும், ஜெயலலிதாவிடம் பேசட்டுமா என ரஜினி கேட்டதற்கு, அதெல்லாம் வேண்டாம், நீங்கள் பேசி உங்கள் மரியாதையை இழக்க வேண்டாம், அப்படி ஒரு பதவி எனக்கு தேவையில்லை, பதவியெல்லாம் எனக்கு பெரிது கிடையாது என்று பெருந்தன்மையாக ஆர்.எம்.வீ தெரிவித்ததாக ரஜினிகாந்த் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவை தான் எதிர்த்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என கூறியுள்ள ரஜினிகாந்த், ஆர்.எம். வீரப்பன் ஒரு ரியல் கிங் மேக்கர் என தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுக்க சில காரணங்கள் இருந்தாலும் , இது ரொம்ப முக்கியமான காரணம் ...
— Binary Post (@BinaryPost001) April 9, 2025
திரு.R.M.வீரப்பன் அவர்களைப் பற்றி தலைவர் ... #RMVeerappan #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #Baasha #Jayalalitha @rajinikanth #BinaryPost
April 09,… pic.twitter.com/TB1HbsG70K





















