Erode East By Election: மோடியும் இல்லை.... அண்ணாமலையும் இல்லை... பாஜக கூட்டணியை முறித்ததா அதிமுக...?
ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பா.ஜ.க பெயரோ கொடியோ இடம்பெறாதது, பாஜக அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
![Erode East By Election: மோடியும் இல்லை.... அண்ணாமலையும் இல்லை... பாஜக கூட்டணியை முறித்ததா அதிமுக...? raised questions about the AIADMK alliance as there is no BJP name or flag in the election workshop set up by the AIADMK for the Erode by-election. Erode East By Election: மோடியும் இல்லை.... அண்ணாமலையும் இல்லை... பாஜக கூட்டணியை முறித்ததா அதிமுக...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/01/e43e0ec936faf6ba501d1fb94fff77651675238902455589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஈரோடு இடைத்தேர்தலுக்காக அதிமுக அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் பா.ஜ.க பெயரோ கொடியோ இடம்பெறாதது, பாஜக அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இன்று காலை அதிமுக ஈபிஎஸ் தரப்பில் இன்று காலை வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. பா.ஜ.க வின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என குறிப்பிட்ட ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம் படங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் பணிமனையை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். இதற்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி என இடம்பெற்றிருந்த நிலையில், தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டியதில் பா.ஜ.கவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இந்த நடவடிக்கைக்கு தக்க நேரத்தில் பதில் கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (இபிஎஸ் தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தென்னரசு?
2001-ல் ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கிய கே.எஸ்.தென்னரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமியை 24,440 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். ஈரோடு கிழக்குத் தொகுதியாகப் பிரிக்கப்பட்ட பிறகு 2016 தேர்தலிலும் வெற்றி பெற்றவர் என்பதால், தொகுதி மக்களிடையே நன்கு பரிட்சயமானவர். ஒரு வேளை இரட்டை இலைச் சின்னம் இல்லாவிட்டாலும், ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கெனவே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.ஏ.தென்னரசுக்கு வாய்ப்பு கொடுத்தால் கூடுதல் வாக்குகளைப் பெற முடியும் என்ற நிலையில் தற்போது இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு நிலவரம் என்ன?
2011-ம் ஆண்டுக்கு முன்புவரை பிரிக்கப்படாத ஈரோடு தொகுதியாக இருந்த நிலையில், 2011-ம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஈரோடு கிழக்கு, மேற்கு என இரண்டு தொகுதியாகப் பிரிக்கப்பட்டன. அதைதொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடைபெற்ற மூன்று தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இரண்டு முறையும், தி.மு.க கூட்டணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் தான் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இரண்டு முறை அதிமுக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற தென்னரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் இபிஎஸ் சார்பிலான அதிமுக அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)