புதுச்சேரி போலி மருந்து வழக்கு: ரங்கசாமி, செல்வம், நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்! நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!
போலி மருந்து வழக்கு விவகாரம் சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்றால் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி மருந்து விவகாரத்தில், விசாரணை சுதந்திரமாக நடைபெற முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
போலி மருந்து வழக்கு விவகாரம்
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த நிர்வாகிகள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...
ஆட்சியாளர்கள் மீது நேரடி குற்றச்சாட்டு
"புதுச்சேரியில் போலி மருந்து தயாரிக்கப்பட்ட வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதில் நேரடியாகத் தொடர்புடைய உயர் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ இன்னும் கைது செய்யப்படவில்லை. பா.ஜ.க மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் இதில் பெரும் கையூட்டு பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர், சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நேரடித் தொடர்பு உள்ளது.
இவர்கள் அதிகாரத்தில் நீடிக்கும் வரை இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது. காவல்துறைக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும். எனவே, இந்த விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டுமென்றால், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட மூவரும் உடனடியாகத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்."
சிபிஐ விசாரணை மற்றும் கடத்தல் விவகாரம்
மத்திய அரசு குறித்துப் பேசிய அவர், "பாஜகவினர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை சிபிஐ-க்கு அனுப்பி காலதாமதம் செய்து, உண்மைகளை மூடி மறைக்க மோடி அரசு முயல்கிறது. இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கத் தவறினால், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் இலங்கை வரை கடத்தப்பட்டுள்ளன. இது தேசப் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் விரிவான விசாரணை அவசியம்," என்றார்.
அரசு மீதான அதிருப்தி
புதுச்சேரி கூட்டணி அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நாராயணசாமி: 2.5 லட்சம் பேருக்கு வேலை தருவதாகக் கூறிவிட்டு, 2,100 பேருக்குக் கூட வேலை வழங்கவில்லை. பாரதியார் கிராம வங்கியின் பெயரிலிருந்து பாரதியார் பெயரை நீக்கியதன் மூலம் மத்திய அரசு அவரை அவமதித்துள்ளது. புதிய பேருந்து நிலையம், அண்ணா திடல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்வைத்துள்ளார்.





















