"அரங்கம் அதிரட்டுமே” ‘கூலி’ ஸ்டைலில் முதலமைச்சர்... உற்சாகத்தில் தொண்டர்கள்..!
புதுச்சேரி முதல்வர் பிறந்தநாளையொட்டி நகரெங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் பிறந்தநாளையொட்டி நகரெங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக ரஜினியின் ‘கூலி’ பட ஸ்டைலில் ரங்கசாமியை அவரது தொண்டர்கள் பேனரில் வடிவமைத்துள்ளனர்.
புதுச்சேரி முதல்வர் பிறந்தநாளையொட்டி நகரெங்கும் கடஅவுட்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி ரங்கசாமியின் ஆதரவாளர்கள் நகரம் மற்றும் கிராமங்கள் என பல்வேறு இடங்களில் வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர். முதலமைச்சரை நடிகருக்கு இணையாக சித்தரித்து தொண்டர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.
1950 ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். ஆண்டுதோறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஐந்தாவது ஆண்டில் இருப்பதால் இம்முறை ரங்கசாமியின் பிறந்தநாளை அதிக சிறப்பாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்களை, அவருடைய உருவ படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு. ஆனால், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப்பம் போல் திரைப்பட நடிகர்கள் உருவங்களில் பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப்படப் பாணியில் பேனர்களை வடிவமைப்பார்கள். இதனால் புதுச்சேரி நகரமே பிரமாண்டமாக இருக்கும்.
இந்த முறை ‘கூலி’ திரைப்பட பாணியில் ரஜினி பாணியில் முதல்வர் ரங்கசாமியின் படங்களை பேனர்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். ரஜினியின் முகத்துக்கு பதிலாக ரங்கசாமி படத்தை வைத்து பேனரை வடிவமைத்துள்ளனர். மேலும் பல திரைப்படப் பாணியில் ரங்கசாமிக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளைப் புதிதாக அமைத்த சாலைகளைத் தோண்டி வைத்துள்ளனர்.





















