தனியார் விடுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை - புதுச்சேரியில் சோகம்
புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை.
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் விடுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக புதுச்சேரி பெரியகடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், அவரது மனைவி சரஸ்வதி (48) மகன் சுதர்சன், மகள் சௌந்தரியா ஆகியோருடன் கடந்த 7 ஆம் தேதி இரவு புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் நகர பகுதியான முத்துமாரியம்மன் கோயில் வீதியில் உள்ள பீனிக்ஸ் என்கிற தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு அறையை காலி செய்வதாக இருந்தனர். திடீரென ஒரு நாள் கூடுதலாக அறை வேண்டும் என கேட்டு தங்கி உள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் அவர்கள் அறையை காலி செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கவில்லை என்பதால் விடுதி ஊழியர் வெகு நேரமாக கதவை தட்டி பார்த்த போது அவர்கள் கதவை திறக்கவில்லை.
இதனால் மாற்று சாவி கொண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர்கள் நான்கு பேரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனை அடுத்து விடுதி ஊழியர் பெரியக்கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
எதற்காக இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்திற்கும் புதுச்சேரி போலீசார் தகவல் தெரிவித்த நிலையில் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.