Property Registration | நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆவணப்பதிவுக்கு ‘நோ’: வீட்டுமனை மதிப்பு பூஜ்ஜியம்.. பதிவுத்துறை கறார்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வரைமுறைபடுத்தப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளின் மதிப்பு '0' பூஜ்ஜியமாக கருதப்படும்
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் அதனைச் சார்ந்த அரசு புறம்போக்கு நிலங்களை எக்காரணம் கொண்டும் ஆவணப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது என பதிவு அலுவலர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனை தங்களின் எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலர்கள் சரிவர கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களும் துணை பதிவுத்துறை தலைவர்களும் உறுதி செய்திட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்தது.
இதனை மீறி ஆவணங்கள் எதும் பதிவுசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர், மாவட்ட பதிவாளர் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள்- 1973 விதி 17(பி) -ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், நீதிமன்ற ஆணையை புறந்தள்ளியதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் உள்ளாக நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட சொத்துக்களை தமிழ்நிலம் மென்பொருள் வழி கண்டறியவும், கணினி மயமாக்கப்படாத நத்தம் நிலங்களை பொருத்து அவற்றில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளின் விபரங்களை வருவாய் துறையினரை தொடர்பு கொண்டு சொத்துக்களின் பட்டியல் பெற்றுக்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழிகாட்டி பதிவேட்டில் மேற்கண்ட நிலங்களுக்கு '0' பூஜ்ஜிய மதிப்பு உட்புகுத்தவும் கோரப்பட்டது.
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் ஏரி, சேலையூர் ஏரி, அவற்றின் உள்நீர்வழிப்பாதை மற்றும் உபரி நீர் வெளியேற்றும் பாதை ஆகியவை தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் உள்ளதாகவும், இதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் ஏரியினை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தால் சூழப்படுவதாகவும் இதனால் உயிரிழப்புகள் பண இழப்புகள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவதாகவும் 'அறப்போர் இயக்கம்' சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்பினால் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் தெரிவித்து அதனை அகற்றி சிட்லப்பாக்கம் ஏரிக்கு சொந்தமான நிலத்தினை மீட்டிட வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும், இத்தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
செப்டம்பர் 2-ஆம் தேதி அன்று, உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க தமிழக அரசின் தலைமை செயலாளர் தலைமையில் சம்மந்தப்பட்ட அனைத்து அரசுத்துறை உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப் பெற்றது. இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், உள் மற்றும் வெளி நீர்வழிப்பாதைகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை தடுப்பதன் பொருட்டு ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவுகளின் அடிப்படையில், பதிவுத்துறை தலைவர் அலுவலகம் தற்போது இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம், நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள வரைமுறைபடுத்தப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளின் மதிப்பு '0' பூஜ்ஜியமாக கருதப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்