வாகனங்களில் G, அ என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை : போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை
அரசு வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் ‘G’ மற்றும் ‘அ’ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
அரசு வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் ‘G’ மற்றும் ‘அ’ என்ற எழுத்துகளைப் பயன்படுத்தினால் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
அரசுப் பணிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வாகனங்கள் வழங்கப்படும். அது அரசு வாகனம் என்பதை குறிக்க அதில் ‘அ’ என்றும் ‘G’ என்றும் அடையாளப்படுத்தப்படும். அதோடு அந்த வாகனங்களில் தமிழ்நாடு அரசு என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால், அரசு அலுவலகங்களில் கிளார்க்காக வேலை பார்ப்பவர்களும் தங்களது சொந்த வாகனங்களில் ‘G’ மற்றும் ‘அ’ என்ற எழுத்துகளை பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறை தணிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், தாங்கள் ஒரு அரசுப்பணியாளர் என்பதைக் காட்டிக்கொள்வதற்காகவும் இது போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்துவதாக தொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் இது போன்று அரசு வாகனங்கள் இல்லாத தனி நபர் வாகனங்களில் இந்த எழுத்துகளைப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் ‘அ’ அல்லது ‘G’ என்ற எழுத்துகள் எழுதப்பட்டோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டோ மோட்டார் வாகனச் சட்டத்திற்குப் புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் 3 உட்பிரிவு(கே)-ன் படி அரசு வாகனம் என்றால் அது தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்புச் சான்று விலக்கு பெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே ‘அ’ அல்லது ‘G’ என்ற எழுத்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
எனவே தமிழ்நாடு அரசு வாகனங்களைத் தவிர மற்ற அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘அ’ அல்லது ‘G’ என்ற எழுத்துகளை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.