3 மணி நேரத்தில் ரூ.31 ஆயிரம் கோடியில் திட்டங்கள்: பிரதமரின் ‛சுனாமி விசிட்’ குறித்தோர் பார்வை!
பிரதமர் பங்கேற்கும் இந்த விழாவை, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை.
• தமிழகத்திற்கு பிரதமர் வருகிறார் என்றாலே, கோ பேக் மோடி, வெல்கம் மோடி போன்ற சொல்லாடல்கள் பெரும் ஹிட்டாகி விடும். ஆனால், இந்த முறை, பிரதமருடன் மூன்று மாநில முதல்வர்கள், ஒரு ஆளுநர், 5 மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பெரும் விவிஐபி-க்கள் இந்த ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
• விமான நிலையத்தில் இருந்து, நிகழ்ச்சி நடைபெறும் ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை, எங்கு நோக்கினும் காக்கி உடைகள்தான் என்ற அளவில் உச்சக்கட்ட பாதுகாப்பு. சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 5 கூடுதல் கமிஷ்னர்கள், 8 இணை ஆணையர்கள், 29 துணை ஆணையர்கள் உட்பட 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். 5 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், சென்னை மாநகரமே, அந்த குறிப்பிட்ட வழி முழுவதும் போலீஸ் பாதையாகவே காட்சி அளிக்கிறது.
• சென்னை மாநகரவாசிகளே, பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஈவேரா சாலை, தாசப்பிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். அதேபோல் அண்ணா சாலை , ஜிஎஸ்டி சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால், அதற்கேற்ப பொதுமக்கள் திட்டமிட்டு கொள்ளவும் என போலீசார் சிறப்பு அறிவுறுத்தலே கொடுத்துள்ளனர்.
• 3 மணி நேரம் சென்னைக்கு வரும் பிரதமர் சுமார் 90 நிமிடங்கள்தான் இந்த விழாவில் பங்கேற்க இருக்கிறார். இந்த விழாவின் மூலம், அவர் 31 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 திட்டங்களைத் திறந்து வைக்கிறார். இதில், 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான 5 நிறைவடைந்த திட்டங்களைத் திறந்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 28 ஆயிரத்து 500 கோடி ரூபாயிலான மற்ற 6 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
• இந்த திட்டங்களில், ஆந்திராவுக்கும், கர்நாடகத்திற்கும் சில திட்டங்களால் பயன் இருக்கிறது என்பதால், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் இணைந்து இந் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் மத்திய அமைச்சர்கள் ஐவர் பங்கேற்கிறார்கள் என்பதால், விவிஐபி-க்களால் மேடையே களைக் கட்டப் போகிறது.
• இதில் நிறைவடைந்த திட்டங்கள் என்று பார்க்கும்போது, சென்னை மாநகரில், 116 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்ட 1152 வீடுகள் திறக்கப்பட இருக்கின்றன அதேபோல், மதுரை – தேனி ரயில்பாதை, தாம்பரம் – செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில் பாதை உள்ளிட்ட 5 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்,
• ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் பிரதமர், வந்த வேகத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவே, தலைநகர் டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். எனவே, இந்த மின்னல் வேக நிகழ்ச்சி பயணத்தில், பெரிய அரசியல் பேச்சு நடைபெற வாய்ப்பு இல்லை. ஆனால், சில தமிழக பாஜக விஐபி-களை சில நிமிடங்கள் பிரதமர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது உறுதிச் செய்யப்பட வில்லை.
• தமிழக அரசைப் பொறுத்தமட்டில், இந்த பெரும் மேடையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. நீட்டுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை மேடையிலேயே பிரமதரிடம் வலியுறுத்த முதல்வர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
• பிரதமர் பங்கேற்கும் இந்த விழாவை, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்றால் மிகையில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பிரதமர் கொண்டு செல்கிறார் என்ற வகையில் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி, பெரும் பிரச்சாரங்களை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
• சுனாமி போல், வந்த வேகத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு பிரமதர் திரும்பி செல்ல இருந்தாலும், அவர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மற்றும் அடிக்கல் நாட்டும் திட்டங்கள், நிச்சயம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமல்ல, கட்சிகளின் அரசியலுக்கும் என்றால் மிகையில்லை.