PM Modi: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு.. களமிறங்கிய காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி..
பிரதமர் மோடி இன்று சென்னை வருகையை ஒட்டி, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
பிரதமர் மோடி இன்று சென்னை வருகையை ஒட்டி, திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவைகள் கருப்புக்கொடியோடு போராட்டம் நடத்தி வருகின்றன.
ரூ. 2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுக்காப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆன்லைன் ரம்மி மசோதா, நீட் தேர்வு விலக்கு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மனு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கட்சி தலைவரும், முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ள நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி கருப்புக்கொடி காட்டி வருகின்றன. மேலும், ட்விட்டர் பக்கத்தில் #GOBACKMODI என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து Go- back-modi என பலூனுடன் இன்று மாலை ஒரு வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் பதிவு செய்து இருந்த நிலையில் காவல்துறையினர் அந்த பலூன்களை பறிமுதல் செய்தனர்.
பிரதமர் மோடியின் இன்றைய பயண திட்டம்:
இன்று மதியம் 1.35 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலம் சென்னைக்கு 2.45 மணிக்கு வருகை புரிகிறார். தொடர்ந்து மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்து வைத்து, மாலை 3:30 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை ஐஎன்எஸ் அடையாறு சென்றடைகிறார். பின்னர் மாலை 3:55 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்று 4:20 மணி வரை, சென்னை கோவை இடையே அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தொடர்ச்சியாக மாலை 4:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காரில் புறப்பட்டு, மாலை 4:40 மணிக்கு மெரினா கடற்கரை எதிரில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு சென்று, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். முன்னதாக, இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்படும் பிரதமர் மாலை 6:20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகை புரிந்து, பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க இருக்கிறார்.
பின்னர், இரவு 7:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் மைசூர் புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு மைசூர் விமான நிலையம் சென்றடைகிறார்.