தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்!
கடந்த 3ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் இன்று காலமானார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன் சிகிச்சைப்பலனின்றி இன்று காலமானார். கடந்த 3ஆம் தேதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவருக்கு வயது 76. நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த இவர், சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி, இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
பின்னர், சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டாா். சாதாரண வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், கடந்த 5ஆம் தேதி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை, "தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தொடக்க காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டு தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர். பிறகு, வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வணிகர் சங்கத்தை தொடங்கியவர்.
தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் வணிகப் பெருமக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். வெள்ளையனின் மறைவு தமிழக வணிகப் பெருமக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் வணிகர் சங்கப் பேரவையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 75 years of DMK : தெற்கிலிருந்து உதித்த சூரியன்; அண்ணா எனும் பேராயுதம்” திமுக உருவான வரலாறு..!