சென்னை உயர் நீதிமன்றத்தின் முழுநேர தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா நியமனம்..!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு, 9 மாதங்களாக முழு நேர தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது.
9 மாதங்களுக்கு பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு முழு நேர தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி:
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலாவை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, கடந்த 2010ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், மும்பை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் மூலம், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு முழு நேர தலைமை நீதிபதி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெற்ற பிறகு, 9 மாதங்களாக முழு நேர தலைமை நீதிபதி பதவி காலியாக இருந்தது. அதன் பிறகு, நீதிபதி துரைசாமி, நீதிபதி டி. ராஜா மற்றும் தற்போது நீதிபதி வைத்தியநாதன் ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகின்றனர்.
மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள்:
சமீபத்தில், மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
முதலில், கேபினட் அந்தஸ்தில் இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டம் மற்றும் நீதித்துறை பறிக்கப்பட்டு புவி அறிவியல் துறை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சராக பதவி வகித்த எஸ். பி. சிங் பாகேல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, நீதிபதிகள் நியமன விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்யும் நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த சூழலில், நாட்டின் பழமை வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 9 மாதங்களாக முழு நேர தலைமை நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது பல்வேறு விதமான கேள்விகளுக்கு வழிவகுத்தது.