Ponmudi: திமுக ஹாப்பி..! மீண்டும் அமைச்சரானார் பொன்முடி - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி
Ponmudi: தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சராக பொன்முடிக்கு, ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Ponmudi: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுகவைச் சேர்ந்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏவான பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வி அமைச்சர் பதவி மீண்டும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றி, பொன்முடிக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனிடயே, உயர்கல்வி அமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த, பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, தற்போது கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அவருக்கு இந்த பொறுப்பை வழங்குவதாக, ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். பொன்முடி மீண்டும் அமைச்சரானதை, திமுக தொண்டர்கள் அறிவாலயம் வளாகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
பதவியை இழந்தது ஏன்?
கடந்த 2021ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும், அக்கட்சியின் மூத்த தலைவரான பொன்முடி உயர்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகள் பறிக்கப்பட்டன. அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஆளுநரை சாடிய உச்சநீதிமன்றம்:
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரணையின் அடிப்படையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என, ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், ”தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, பொன்முடி குற்றவாளி இல்லை என கூறவில்லை. எனவே அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது” என பதில் அளித்தார். இதையடுத்து, பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் ஏற்காதது ஏன்? உடனடியாக ஆளுநர் முடிவெடுக்கவிட்டால் நாங்கள் அதிரடி நடவடிக்கையை எடுக்க வேண்டி இருக்கும்” என சாடியது. இந்நிலையில் தான், பொன்முடிக்கு ஆளுநர் ரவி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
வழக்கு என்ன?
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து குவித்தாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்கள் மீது கடந்த 2011ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.