Tamilnadu Encounter: சென்னை அடுத்த தாம்பரத்தில் எண்கவுண்டர்.. 2 ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசார்
சென்னை அடுத்த தாம்பரத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
![Tamilnadu Encounter: சென்னை அடுத்த தாம்பரத்தில் எண்கவுண்டர்.. 2 ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசார் Police shot dead 2 rowdies in encounter in Tambaram next to Chennai Tamilnadu Encounter: சென்னை அடுத்த தாம்பரத்தில் எண்கவுண்டர்.. 2 ரவுடிகளை சுட்டுக்கொன்ற போலீசார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/41ed21269a9f2fa8299d35d26a5fb2631690273673978102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அடுத்த தாம்பரத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
என்கவுண்டர்:
சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் காரணி புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீசாரை வெட்டிய நபரை கூடுவாஞ்சேரி போலீசார் சுட்டுக்கொன்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட நபர் சோட்டா வினோத் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது மீது 10 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரமேஷ் என்ற ரவுடியையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
வாகன தணிக்கையின் போது தாக்குதல்:
காரணைபுதுச்சேரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது, ஒரு காரை இடைமறித்து சோதனையில் ஈடுபட்டனர். தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காரணைப்புதுச்சேரி அருகே சாலையில் இன்று அதிகாலை 3:30 மணி அளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த கருப்பு நிற காரை நிறுத்த முற்பட்டபோது நிற்காமல் முன்னேறிய கார் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து, போலீஸ் ஜீப் மீது மோதி நின்றது. அந்த காரின் அருகில் சென்ற போது உள்ளே நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் இறங்கி உதவி ஆய்வாளரை தாக்கியதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 பேர் சுட்டுக்கொலை:
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று Cl-08-2023 ஆம் தேதி அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலிஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர். அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டி மீண்டும் தலையில் வெட்ட முற்பட்ட போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டுபட்டது. இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேற்படி காயம்பட்ட இருவரை பற்றி விசாரிக்க அதில் ஒருவர் பெயர் வினோத் (எ) சோட்டா வினோத். வயது 35, த/பெ. சுப்பிரமணி என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A+ Category, HS.No.04/15) குற்றவாளி எனவும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி. 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் மற்றொரு நபர் பெயர் ரமேஸ். வயது 32. த/பெ. சுந்தரம் என்றும் அவர் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு (A Category, H5.No.18/20) குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிறுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி, 8 அடிதடி மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேற்படி காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது எதிரிகள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)