‘டாக்டர் ராமதாசுக்கு எதிராக சதி?’ கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட்ட திமுக அரசு..!
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் வீட்டிற்கு ஏற்கனவே இருந்த ஆறு போலீசாருடன், கூடுதலாக ஐவர் நியமிக்கப்பட்டு, மொத்தம் 11 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தைலாபுரம் தோட்டத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதலை தொடர்ந்து, அன்புமணி ஆதரவாளர்களை, மாநில, மாவட்ட பதவிகளில் இருந்து மருத்துவர் ராமதாஸ் நீக்கி வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாமகவில் ஏற்பட்ட விரிசல் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் மாவட்ட அளவில் பொதுக்குழுவை கூட்டி மாவட்ட தலைவர், செயலாளர்களை நியமிக்கும் வகையில் அன்புமணி உத்தரவிட்டுள்ளார். மறுபுறம் புதிதாக நியமிக்கப்பட நிர்வாகிகள் உடன் நேற்று காலை 10 மணிக்கு ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
சோதனைக்கு பின் அனுமதி
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு, ஏற்கனவே இருந்த ஆறு போலீசாருடன், கூடுதலாக ஐவர் நியமிக்கப்பட்டு, மொத்தம் 11 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில், ராமதாசை சந்திக்க வருவோர், பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். யாரையும் எளிதாக நம்பி, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என, மருத்துவர் ராமதாஸிடம் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தந்தையிடம் மன்னிப்பு கேட்ட மகன் அன்புமணி
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
உலக தந்தையர் தினம். எனவே மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். அவர் நீண்ட ஆயுளோடு 100 ஆண்டுகளுக்கு மேல், நல்ல ஆயுளோடு, மன நிம்மதியோடு, உடல் நலத்தோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும். ஒரு மகனாக அது என்னுடைய கடமையும் கூட. உங்களுக்கு என்மீது ஏதாவது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும்.
அவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு சுகர், பிபி எல்லாமே உள்ளது. எனவே நீங்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்கவேண்டும். நான் என்ன செய்யவேண்டும் என சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவனாக அதை நிறைவேற்றுவேன். நீங்கள் வருத்தப்படாதீர்கள், கவலைப்படாதீர்கள், கோபப்படாதீர்கள். ஏனென்றால் இது நீங்கள் உருவாக்கிய கட்சி. உங்கள் கனவுகளை நனவாக்குவோம். நீங்கள் இன்று தேசிய தலைவர். கடந்த ஆண்டு பாரத பிரதமர் மோடி, உங்களை இந்தியாவின் மூத்த தலைவர் என்று சொன்னார். அந்த மதிப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது என்று தெரிவித்தார்.
கூடுதல் பாதுகாப்பு வழங்க சொன்ன திமுக தலைமை ?
சித்திரை முழு நிலவு வன்னியர் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தம்பி என்றும் இந்த வன்னியர் சமூகத்திற்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள் என்றும் ராமதாஸ் பேசிய நிலையில், தற்போது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு இரு மடங்காக உயர்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




















