கொள்ளை வழக்கில் சிக்கியவருக்கு பாமகவில் பதவி! ராமதாஸின் இந்த முடிவு ஏன்? அதிர்ச்சியில் தொண்டர்கள்!
அன்புமணியோடு போட்டி போட்டு யாருக்கு பதவி கொடுக்கிறோம் என்றே தெரியாமல் குற்றவாளிகளையெல்லாம் உள்ளே நுழைத்து ராமதாஸ் சிக்கலை உருவாக்குவதாக பாமகவினரே புலம்புகின்றனர்.

வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் ஒன்றிய செயலாளர் பதவியை ஒப்படைத்துள்ளார் ராமதாஸ். அன்புமணியோடு போட்டி போட்டு யாருக்கு பதவி கொடுக்கிறோம் என்றே தெரியாமல் குற்றவாளிகளையெல்லாம் உள்ளே நுழைத்து ராமதாஸ் சிக்கலை உருவாக்குவதாக பாமகவினரே புலம்புகின்றனர்.
அன்புமணி-ராமதாஸ் மோதல்:
பாமகவில் ராமதாஸ் அன்புமணி இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராமதாஸ், செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து அன்புமணி மீது புகார்களை அடுக்கி வருகிறார். அன்புமணியோ நேரில் சென்று சந்தித்தும் பொது மேடையிலும் கூட ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதேபோல் ஐயா காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்.
கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவருக்கு கைது:
மற்றொரு பக்கம் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பவர்களை பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அவசர அவசரமாக புதியவர்களுக்கு பதவி கொடுத்து வருகிறார் ராமதாஸ். இதுவே தற்போது பாமகவுக்கு சிக்கலாக மாறியுள்ளது. அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளராக குமார் என்பவரை நியமித்துள்ளார் ராமதாஸ். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்.
புலம்பும் பாமகவினர்:
இப்படி குற்றப் பின்னணி கூட தெரியாமல் ராமதாஸ் யார் யாருக்கோ பதவி கொடுப்பது பாமகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாமல் அவர் நம்பிக் கொண்டிருக்கும் சிலர் யார் யாரையெல்லாம் கைகாட்டுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் ராமதாஸ் பதவி கொடுத்துக் கொண்டிருப்பதாக பாமகவினரே புலம்புகின்றனர். கட்சிக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கும்பல் குற்றவாளிகளை தேடி தேடி இழுத்துச் சென்று ராமதாஸிடம் பதவி வாங்கித் தருகிறார்கள் என முனுமுனுக்கின்றனர்.
அதுவும் தைலாபுரம் தோட்டத்திற்கு வருபவர்கள் வாசலிலேயே காலணிகளை கழற்றிவிட்டு தான் உள்ளே வருவார்கள். ஆனால் குமார் மட்டும் ராமதாஸ் பொறுப்பு வழங்கிய போது செருப்போடு உள்ளே வந்து கடிதத்தை வாங்கி சென்றது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி யாருடன்?
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவிவருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் பாமகவில் தந்தை மகனுக்கு இடையிலான மோதல் போக்கு தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அன்புமணி ஒரு பக்கம் ராமதாஸ் ஒருபக்கம் இருப்பதால் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வியும் அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.






















