(Source: ECI/ABP News/ABP Majha)
Congress: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி; கருப்பு கொடியுடன் காத்திருக்கும் காங்கிரஸ்!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டுற்கு பிரச்சாரம் செய்ய இன்று வருகின்றார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளதால், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் தமிழ்நாடு பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் நிறைவு விழா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, பல்வேறு நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், 6 நாட்களுக்குள், பிரதமர் மோடி மீண்டும் இன்று தமிழ்நாடு வருகிறார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த மேடைக்கு ‘மீண்டும் மோடி சர்க்கார்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. திமுக பொதுக்கூட்டத்திற்கு நிகராக மக்களை திரட்டி, இந்த பொதுக்கூட்டத்தை நடத்திட பாஜக திட்டமிட்டுள்ளததால், பிரதமரின் அடுத்தடுத்த இந்த பயணம், தமிழக பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பாஜக தனது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுவாக கட்டமைக்கும் பணிகளை செய்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக் கொடி காட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி பிரிவு சார்பிலும் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவர் ரஞ்சன் குமார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழ்நாடு தலைநகரான சென்னைக்கு வருவதால் 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையின் முக்கிய சாலைகளில் மதியம் 12 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வணிக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சென்னை பயண விவரம்:
- மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார் பிரதமர் மோடி
- விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்
- மதியம் 3.30 மணிக்கு அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.
- அதனை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்
- சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை அடைந்து, அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
- கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாக பிரதமர் மோடி தெலங்கானா செல்கிறார்.
மக்களவைத் தேர்தலுக்காக ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி சார்பில் 195 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முதற்கட்டமாக அறிவித்துள்ளது.